ஆட்களை தக்கவைக்க சுற்றுலா அழைத்துப்போய் குஷிப்படுத்தும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

1 month ago 9

‘‘மாங்கனி விஜிலென்ஸ் பேரை கேட்டாலே அதிருதாமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. ஜெயில் டிப்பார்ட்மென்டில் விஜிலென்ஸ் பிரிவு இருக்கு. ஒவ்வொரு சென்டிரல் ஜெயிலுக்கும் ஒரு டீம் இருக்குது. சிறப்பு எஸ்.ஐ. தலைமையில் இயங்கும் இப்பிரிவினர் காலையில் வருவதும் பின்னர் உறங்குவதுமாகவே இருந்தாங்களாம். அப்பிரிவின் உச்சஅதிகாரியின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக விஜிலென்ஸ் இப்போ விழிப்படைஞ்சிட்டாங்களாம். இதுக்கு உதாரணமா மாங்கனி மாநகரில் சென்டிரல் ஜெயிலில் சம்பவம் ஒன்னு நடந்துச்சாம். பிசிபி என்ற பிரிவு இருக்குதாம்.

இங்கு கைதிகளின் அக்கவுண்ட் இருக்குமாம். சிறையில் உள்ள தேவையான உணவு பொருட்களை வாங்கிக்கொள்ளலாமாம். ஆனால் சிறை கைதிகளுடன் தொடர்பை வைத்துள்ள வார்டன்கள் ஜிபே மூலம் பணம் பெறுவதை அந்த விஜிலென்ஸ் கண்டுபிடிச்சிட்டாங்களாம்.. ரெண்டு ஏட்டுக்கள் அக்கவுண்டுக்கு வந்த தொகை ஐநூறு, ஆயிரம்லாம் இல்லையாம்.. ஒன்றரை லட்சமாம்.. அது அப்படியே ரெண்டுபேர் வீட்டுக்கே போயிடுமாம். தூங்கா நகரத்து ஜெயில் மோசடியின் சூடு ஆறுவதற்கு முன்பு, மாங்கனியிலும் மோசடி நடந்திருக்கு. இதன்மூலம் கண்கொத்தி பாம்பா இருக்குதாம் இந்த மாங்கனி விஜிலென்ஸ்.

அதோடு நில்லாமல் ஆபீசர்ஸ்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் வார்டன் ஒருவரின் கையும் கைதிகளிடம் ஓங்கியிருக்கு.. இதனையும் கண்டுபிடிச்ச விஜிலென்ஸ் ரிப்போர்ட் போட்டிருக்காங்க. அந்த ரெண்டு வார்டனையும் அலேக்கா தூக்கிட்டாங்களாம் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஆபீசர். இதனால மாங்கனி விஜிலென்ஸ் பேரை கேட்டாலே சும்மா ஜெயிலுக்குள்ள அதிருதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேட்பாளர் போட்டி இப்பவே சூடாகிட்டு இருக்குது போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.

‘‘புரம் என முடியும் கடலோர மாவட்டத்தின் தலைநகர் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் என்ற சென்டிமென்ட் பல ஆண்டுகளாக உள்ளது. இதனால், இந்த முறை இலைக்கட்சியின் சார்பில் எப்படியும் பிரபலமான வேட்பாளரை நிறுத்திவிட வேண்டும். ஒருவேளை மலராத கட்சியுடன் கூட்டணி அமைந்தால் கூட தொகுதியை அவர்களுக்கு விட்டு தரக்கூடாது என இலைக்கட்சியினர் தீவிரமாக உள்ளராம்… இதற்கு முன்னோட்டமாக, நடிகையிடம் பாலியல் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் மாஜி அமைச்சரான டாக்டரை, எப்படியாவது வேட்பாளராக்கி விட வேண்டும் என மாவட்ட இலைக்கட்சியினர் முடிவு செய்துள்ளனராம்.

இப்போதுள்ள நிலையில் அவர் தான் அதிகளவில் செலவிட முடியும். எனவே, அவர் தான் வேட்பாளர் என்ற அளவுக்கு கட்சியினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. அதே நேரம் அவருக்கு ஆகாத எதிர்கோஷ்டியினர், நடிகை விவகாரத்தால் தொகுதியில் டாக்டருக்கு நல்ல பெயர் இல்லை. அதனால், அவருக்கு சீட் கொடுத்தால் கட்சி தேறாது. அவருக்கு தரக்கூடாது. மற்றொரு ‘கிங்’ மாஜி அமைச்சருக்கு தரலாமென வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். மறுபக்கம் எப்படியும் கூட்டணி ஓகே ஆகி விடும் என்ற நம்பிக்கையில், தங்களுக்குத்தான் தலைநகர் தொகுதி என தாமரை கட்சியினரும் அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனராம்…

வழக்கம்போல ஆரம்பிச்சுட்டாங்க… நம்ம கூலா வேலை பார்ப்போம் என மற்ற கட்சிகள் தேர்தல் வேலைகளில் வேகம் காட்டத் தொடங்கி விட்டனராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கூட்டத்தை கூட்ட படாத பாடு படறாங்கன்னு சொல்றாங்களே.. என்னா விஷயம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மலைக்கோட்டை நகரில் மலராத கட்சியின் கூட்டம் போல மாநிலம் முழுவதும் நடைபெறும் கூட்டத்தை மாநாடு போல நடத்த வேண்டும் என்று மலையானவர் ஜில்லா தலைவர்களுக்கு உத்தரவு போட்டுள்ளாராம்.

ஆட்களை எப்படி அழைத்து வருவீங்க, எப்படி திரட்டுவீங்கனு எனக்கு தெரியாது. ஆனா, கூட்டத்துல ஜனங்க நிரம்பி வழியணும். நான் மேடைக்கு வரும்போது கூட்டம் அலைமோதனும்னு உத்தரவு போட்டிருக்காராம். ஆனா, அடுத்த மாசம் ஆரம்பத்துல வெயிலூரில் நடத்தப்போற கூட்டத்துக்கு இன்னும் காக்கி துறையிடம் அனுமதி கடிதமே இந்த ஜில்லா தலைவரு கொடுக்கலையாம். தொல்லியல் துறையிடம் மட்டும் கோட்டை மைதானத்தை கூட்டம் நடத்த இடம் கேட்டு கடிதம் கொடுத்திருக்காங்களாம்.

மைதானத்துல 2ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடக்கிறதால, அவங்களும் இன்னும் ஏதும் சொல்லலையாம். அப்படியே அங்கு அனுமதி கிடைச்சாலும், அடுத்த 2 நாட்களில் எப்படி ஏற்பாடுகளை செய்வாங்கனு மலராத கட்சியின் சொந்தங்கள் மாவட்டத்தை கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்களாம். இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, கூட்டத்தை வைச்சு ஒரு கோஷ்டி இப்பவே வசூல் வேட்டையை ஆரம்பிச்சுட்டாங்களாம். இவங்களோட இந்த அலம்பல பாத்து வெயிலூர் மக்கள் சிரிப்பை அடக்க முடியாம சிரிச்சுக்கிட்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கட்சி முன்னணி ஆட்களை தன் கைக்குள் வைத்திருக்க டூர் எல்லாம் கூட்டிப் போனாராமே அந்த மாஜி..’’ என கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘புரம் என்ற மாவட்டத்தில் இலை கட்சியோட மாஜியானவர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறாராம். மாவட்டம் பிரிந்து குறிச்சி முளைத்துவிட்ட நிலையில், கட்சியின் மாவட்ட பதவிகளையும் பிரித்துவிட இலை தலைமை முடிவெடுத்ததாம். ஆனால் மாஜியானவர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிச்சாராம். இதனால் பதவி பிரிப்பதற்கான காய்களை நகர்த்திய நிலையில் அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டதாம்.

அதாவது மாஜியானவர் ஒன்மேன் ஆர்மியாக மாவட்டத்தில் வலம்வர திட்டமிட்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறாராம். இதற்காக இலை தரப்பு முன்னணிகளை தனது கைக்குள் வைத்திருக்க சுற்றுலா அழைத்து சென்றுள்ளாராம். அதிலும் ஜால்ராவுக்கே முன்னுரிமையாம். ஓசி பயணம் என்பதால் தலைமையை கண்டுகொள்ளாமல், மாஜியுடன் சில நிர்வாகிகளும் கைகோர்த்து உள்ளனராம். அதேவேளையில் சுற்றுலா வாய்ப்பு கிடைக்காதவர்களோ கொந்தளிப்பில் இருக்கிறார்களாம். இதனால் இலை உதிர்தலை தடுக்க முடியாமல் தலைமை பரிதவிப்பில் உள்ளது..’’ என்றார் விக்கியானந்தா….

The post ஆட்களை தக்கவைக்க சுற்றுலா அழைத்துப்போய் குஷிப்படுத்தும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article