தெஹ்ரான்,
ஈரான் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில், குர்திஷ் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் விதிகளை மீறி விட்டார் என்பதற்காக கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்து விட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு தழுவிய போராட்டம் நடந்தது. ஹிஜாப்பை தூக்கி எறிவது மற்றும் ஹிஜாப் எரிப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களால் அதிகாரிகள் திணறி போயினர்.
இதன்பின்னர், பாதுகாப்பு படையினர் கடுமையாக செயல்பட்டு, அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஆடை கட்டுப்பாடு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரானில் உள்ள இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழகத்தில் இளம்பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர் திடீரென ஆடைகளை களைந்து உள்ளாடையுடன் நின்றார். இதனால், சுற்றியிருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, பல்கலைக்கழக பாதுகாவலர்கள் அடையாளம் தெரியாத அந்த இளம்பெண்ணை பிடித்து சென்றனர். இதன்பின்னர் அவர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுபற்றி பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் ஆமிர் மஜாப் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், காவல் நிலையத்தில்... அந்த இளம்பெண் கடுமையான மனஅழுத்தம் மற்றும் மனநல பாதிப்பில் இருப்பது தெரிய வந்துள்ளது என தெரிவித்து உள்ளார். இந்த விவகாரத்தில், அந்த இளம்பெண் மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றிய வீடியோ மற்றும் ஊடக செய்திகள் வெளியான நிலையில், அந்த பெண் தெளிவான நிலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார் என ஒரு சிலர் கூறுகின்றனர்.
லெய் லா என்ற பயனாளர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பொதுவெளியில் உள்ளாடையுடன் தோன்றுவது என்பது பெண்களில் பலருக்கு மோசம் வாய்ந்த ஒரு கனவாகவே இருக்கும். ஹிஜாப் கட்டாயம் என்ற அதிகாரிகளின் முட்டாள்தன நிபந்தனைக்கு எதிராகவே இந்த நிகழ்வு நடந்துள்ளது என தெரிவித்து வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.
இதுபற்றி ஈரான் நாட்டில் உள்ள ஆம்னெஸ்டி என்ற அமைப்பு வெளியிட்ட செய்தியானது, ஹிஜாப் சரியாக அணியாததற்காக பாதுகாப்பு அதிகாரிகளால் அந்த இளம்பெண் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார். இந்த ஆடை கட்டுப்பாடு விவகாரத்திற்கு எதிராகவே அவர் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என தெரிவிக்கின்றது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர் அவருக்கு உதவியாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.