ஆடிட்டரிடம் ரூ.1 கோடி பறித்த இன்ஸ்பெக்டர் கைது

3 hours ago 2

தஞ்சாவூர்: கலெக்டரின் உறவினர் எனக்கூறியும், வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாக கூறி தஞ்சை ஆடிட்டரிடம் ரூ.1 கோடி பணம் பறித்த இன்ஸ்பெக்டரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா குலசேகரநல்லூரில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.465 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக விளை நிலங்களை அரசு கையகப்படுத்தி தொடர்புடைய உரிமையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது.

அதன்படி கும்பகோணம் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்த ஆடிட்டரான ரவிச்சந்திரனுக்கு (68) சொந்தமான 80 சென்ட் நிலமும் குலசேகரநல்லூரில் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தில் 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் வளர்த்து வந்தார். இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டதால் தேக்கு மரங்களை என்ன செய்வது என்று ரவிச்சந்திரனுக்கு தெரியவில்லை. இந்நிலையில் கடந்த 2020ல் கன்னியாகுமரியில் ஏழைகளுக்கு சொந்த பணத்தில் ரவிச்சந்திரன் வீடு கட்டி கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு நாகர்கோவிலில் தக்கலை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அரியலூர் மாவட்டம் திருமாந்துறையை சேர்ந்த நெப்போலியன் (45), ரவிச்சந்திரனுக்கு பழக்கமாகியுள்ளார். இதனால் தனது நிலத்தில் வளர்த்து வரும் தேக்கு மரங்களை என்ன செய்வது என்று இன்ஸ்பெக்டரிடம் ரவிச்சந்திரன் ஆலோசனை கேட்டார். அதற்கு அவர், நிலத்தில் உள்ள மரங்களை வெட்டி விற்று விடுமாறு கூறியுள்ளார். அதன்படியே ரவிச்சந்திரனும் செய்துள்ளார்.

இதனிடையே கும்பகோணத்தை சேர்ந்த வருவாய்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர் நெப்போலியன், ஆடிட்டர் ரவிச்சந்திரன் அவரது நிலத்தில் வளர்த்து வந்த தேக்குமரங்களை அனுமதியின்றி வெட்டி விற்று வருவதாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தேக்குமரங்களை வெட்டி வாகனத்தில் ஏற்றிகொண்டிருந்த போது வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து 3 டன் எடையிலான 207 தேக்கு மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கும்பகோணம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைத்ததுடன் பந்தநல்லூர் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தனர்.

இதனால் ரவிச்சந்திரன், நெப்போலியனை தொடர்பு கொண்டு தன் மீது வழக்கு தொடுக்காமல் இருக்க என்ன செய்வதென்று கேட்டுள்ளார்.  அதற்கு அவர், நான் ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமல்லாமல் கலெக்டர் ஒருவரின் உறவினர் கூட. இதனால் உங்கள் மீது வழக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்க சிபாரிசு செய்கிறேன். அதற்கு ரூ.1கோடி தர வேண்டுமென கூறியுள்ளார். அதன்பேரில் ரூ.25 லட்சம், ரூ.55 லட்சம், ரூ.20 லட்சம் என ரூ.1 கோடியை நெப்போலியனிடம் ரவிச்சந்திரன் கொடுத்துள்ளார்.

அதன் பிறகும் நெப்போலியன் மேலும் ரூ.1 கோடி கேட்டு ரவிச்சந்திரனை தொடர்ந்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரவிச்சந்திரன் கடந்த மாதம் 8ம் தேதி தஞ்சாவூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். எஸ்.பி ராஜாராம் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த 2ம் தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சுங்கசாவடி நிலையம் அருகில் ரவிச்சந்திரனிடமிருந்து இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ரூ.5 லட்சம் பெற்றபோது மறைந்திருந்த தனிப்படையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் இரவு தஞ்சாவூர் அழைத்து சென்று விசாரணைக்கு பின்னர் இன்ஸ்பெக்டர் நெப்போலியனை கும்பகோணம் முதலாவது நீதிமன்றத்தில் நேற்று மதியம் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 15ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி புதுக்கோட்டை சிறையில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் அடைக்கப்பட்டார்.

* தர்மபுரி வீட்டில் சோதனை ரூ.1 கோடி பறிமுதல்
நெப்போலியன் கடந்த ஒரு ஆண்டாக தர்மபுரியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான புலனாய்வு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். தர்மபுரி தென்றல் நகரில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். லஞ்ச புகாரின் பேரில் நெப்போலியன் வீட்டில் நேற்று முன்தினம் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் குழுவினர் சோதனை நடத்தினர். வீட்டில் உள்ள அறைகளில் தீவிரமாக சோதனை மேற்கொண்டு மறைத்து வைத்திருந்த ரூ.1கோடி பணம் மற்றும் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

The post ஆடிட்டரிடம் ரூ.1 கோடி பறித்த இன்ஸ்பெக்டர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article