ஆசைகளை நிறைவேற்றும் ஆங்கிலப் புத்தாண்டு!

3 weeks ago 7

புத்தாண்டு பிறக்கிறது என்றாலே, புதிய உற்சாகமும், எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் பிறக்கின்றன, ஒவ்வொருவர் உள்ளத்திலும்! இவ்வருடத்திலாவது நல்ல வேலை கிடைக்குமா..? படிப்பை முடித்துவிட்டு, வேலைக்கு முயற்சிக்கும் இளைஞர்களின் ஏக்கம் இது! இப்புத்தாண்டிலாவது, வரன் அமையுமா..? திருமண மாலை சூடக் காத்திருக்கும் கன்னியரின் கனவு இது..!அவ்வளவு ஏன்..? வயதான பெரியோர்கள்கூட அன்றைய தினம் இளைஞர்களாகிவிடுகிறார்கள்! காலமே நமது மனநிலையை மாற்றியமைக்கிறது. நமது வாழ்க்கையை நிர்ணயிக்கும் நவக்கிரகங்களின் சஞ்சார நிலைகளில் மிக முக்கிய மாறுதல்கள் நிகழ்கின்றன, இப்புத்தாண்டில்! ராகுவும் கேதுவும் முறையே கும்ப ராசிக்கும், சிம்ம ராசிக்கும் மாறுவது, இந்தப் புத்தாண்டின் மிக முக்கிய நிகழ்வாகும். அதற்கடுத்தபடியாக, குருபகவான், மேஷ ராசியிலிருந்து, மிதுன ராசிக்கு மாறுவதும் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் குறிப்பாக, குடும்ப வாழ்க்கை, மனைவி மக்கள் உறவு ஆகியவற்றில் பல மாறுதல்களை ஏற்படுத்தவுள்ளது. மிதுன ராசிக்கு மாறும் குரு, கும்ப ராசியில் உள்ள சனி பகவானையும் மற்றும் துலாம், தனுர் ராசிகளையும் தனது சுபப் பார்வையினால், தோஷமற்றவையாக செய்துவிடுகிறார், தன்னிகரற்ற “ஜோதிடம்” எனும் வானியல் கலையில் வசிஷ்டர், பராசரர், அகத்தியர் போன்ற நமது வேதகால மகரிஷிகளும், காகபுஜண்டர், போகர், புலிப்பாணி போன்ற சித்த புருஷர்களும் சிறந்து விளங்கினர். பல நூற்றாண்டுகள் வரை நமது பாரதப் புண்ணிய பூமி, கிரேக்க ரோமானிய சாம்ராஜ்யங்கள், எகிப்து, ஆகியவை வானியல் கலையில் உயர்ந்து விளங்கி வந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. ஜோதிட நிபுணர்களுக்கு, அரசவைகளில், அளவற்ற மதிப்பும், மரியாதையும் அளிக்கப்பட்டு வந்தனர்.

விஜயநகர சாம்ராஜியம், அதன் மகோன்னத நிலையில் விளங்கிய போது, அரசவையில் ஜோதிட நிபுணர்களுக்கு உரிய மரியாதையும், மிகப் பொறுப்புள்ள பதவிகளும் கொடுக்கப்பட்டு வந்தன. ஜோதிடத்திற்கென்று, தனி இலாகாவும், மந்திரியும் விளங்கின. புகழ்வாய்ந்த விஜயநகர மாமன்னர் கிருஷ்ண தேவராயரின் ஜோதிட மந்திரியாக விளங்கியவர்அல்லசானி பெத்தன்னா!அப்போது, விஜய நகரத்திற்கு (இன்றைய ஹம்பி) எழுந்தருளிய அேஹாபில மடத்தின் ஆசாரியரான ஸ்ரீமத் அழகிய சிங்கர் அல்லசானி பெத்தன்னாவை, அேஹாபில மடத்தின் ஆஸ்தான ஜோதிட வித்வானாக விருது அளித்து கௌரவித்ததை ஆங்கிலேய சரித்திர ஆராய்ச்சியாளர்கள் விவரித்துள்ளனர் (“The Forgotten Empire” by Dr. Sewell).

“ஜோதிடம்” என்ற அறிவியல்பூர்வமான, வானியல் கலை, நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எப்போது, என்ன நடக்கும்? -என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக மட்டுமே வேதகால மகரிஷிகளும், சித்த மகா புருஷர்களும் நமக்கு அளித்துள்ள கலையல்ல! எப்போது, நாம் நம் வாழ்க்கையின் எந்தெந்த அம்சங்களில் எவ்விதம் நாம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தும் ஒளிவிளக்காகும், ஜோதிடம்! விஜயநகர சாம்ராஜ்யத்தில், குறிப்பாக, படை வீரர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர்களது விண்ணப்பம் ஜாதகத்துடன், இணைக்கப்பட்டு, ஜோதிட மந்திரிக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும். ஜாதகத்தை ஆராய்ந்து, சரிபார்த்த பின்பே நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து, அவர்கள் தேச பக்தி உள்ளவர்களா? வீரத்துடன் போர் புரியும் மனோதிடம் உள்ளவர்களா? உடலில் நோய் ஏதும் இல்லாதவர்களா? என்ற அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து, அதன் பின்னரே நேர்முகத் தேர்விற்கு அழைப்பு விடுப்பதைக் கொள்கையாகக் கடைப்பிடித்துவந்தனர். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம், அக்காலத்தில், நாட்டின் நிர்வாகத்தில் ஜோதிடத்திற்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்துவந்தனர் என்பதை!!நம்மிடமிருந்து இப்போது விடைபெறும் 2024-ம் வருடம் உலக மக்களைப் பெரும் துன்பங்களில் ஆழ்த்திவிட்டு விடைபெறுகிறது! உதாரணத்திற்கு, இஸ்ரேல் – காஸா யுத்தமே போதும்!! இது போதாதென்று, உக்ரைன் – ரஷ்யா போரினால், பல லட்சம் நிரபராதியான பொது மக்கள் தங்கள் குடும்பம், குழந்தைகள், வாழ்க்கை ஆகிய அனைத்தையும் இழந்து, துன்புற்று வருவதையும் உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.
ஒருசமயம், நாரத மகரிஷி, பத்ரி ஆஸ்ரமம் என்ற ேக்ஷத்திரத்தில், வியாச பகவானைச் சந்திக்க நேர்ந்தது. அப்போதுதான், மகாபாரத யுத்தம் முடிந்து, கலியுகமும் ஆரம்பமாகியிருந்த காலகட்டம்! அப்போது, நாரதர் வியாசரைப் பார்த்து, “கலியுகம் ஆரம்பமாகிவிட்டதே! இனி, உலகம் எப்படி இருக்கும்?” என்று கேட்டார். அதற்கு வியாசர், “சோகம், ரோகம், துக்கம், ஸாகரம்” என்ற நான்கே சொற்களில் பதிலளித்தார். அதாவது, கலியில் துன்பங்கள், வியாதிகள், சோகம், ஆகியவை “சம்சாரம்” எனும் துன்பக் கடலில் மக்களை ஆழ்த்தும் எனப் பொருள்படும்படி பதிலளித்தார்!

அன்று அவர் கூறியதை, இன்று நாம் அனுபவத்தில் பார்த்துவருகிறோம். எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும், கூட்டம் கூட்டமாக, நோயாளிகள்! வருமானம் எவ்வளவுதான் வந்தாலும், பற்றாக்குறையுடன் போராடவேண்டியுள்ளது. கணவர், மனைவியரிடையே பரஸ்பர அன்பும், ஈடுபாடும் இல்லாத இல்வாழ்க்கை!! பெற்றோர்களை, எதிர்த்துப் பேசும் குழந்தைகள். “இறைவன் அளித்ததே போதும்…!” என்ற திருப்தி இல்லாமல், மேலும், மேலும் பணத்தின் மீது ஆசை. அதன் காரணமாக, வாழ்க்கையே போராட்டமாக மாறியுள்ளது. இவையனைத்தையும் அன்றே நாரத மகரிஷியிடம் விவரித்த வியாஸ பகவான், தனது ஈடிணையற்ற “பவிஷ்ய புராணம்” என்ற நூலில் விவரித்திருக்கிறார். கலியில், நேர்மைக்கும், நேர்மையைக் கடைபிடிப்பவர்களுக்கும், மரியாதை இராது என்பதை விளக்கியிருக்கிறார், வியாச பகவான் அன்றே! அவரது ஈடு இணையற்ற பவிஷ்ய புராணம், ஒவ்வொருவரும் படித்தறியவேண்டிய மகத்தான பொக்கிஷமாகும். அன்று அவர் எழுதிய ஒவ்வொரு சொல்லும், இன்று நிகழ்வதை அனுபவத்தில் நாம் கண்டுவருகிறோம்.இத்தகைய சூழ்நிலையில், வரும் புத்தாண்டில் நம் வாழ்க்கையை திட்டமிட்டு, வகுத்துக்கொண்டு, நாமும், நம் குடும்பம், குழந்தைகள் ஆகியோரும் மன நிறைவோடும், மகிழ்ச்சியோடும் இருப்போம்.எந்தெந்த ராசியினருக்கு, பரிகாரம் அவசியமோ அத்தகைய அன்பர்களுக்கு, எளிய, ஆயினும் சக்திவாய்ந்த பரிகாரங்களையும், கிரகங்களின் தினசரி சஞ்சார நிலையின்படி (Day-to-day movement of planets), துல்லியமாகக் கணித்துக் கூறியுள்ளோம். இந்தப் பரிகாரங்கள் அனைத்தும் நம் முன்னோர்கள், நமது நன்மைக்காக மிகப் பழைமையான கிரந்தங்களில் எழுதி வைத்துள்ள, மிகச் சிறந்த பரிகாரங்களாகும். கடைபிடிப்பதற்கு எளியவை. பலனோ அபரிமிதமானவையாகும். கைமேல் பலனளிப்பவை! இனி ஒவ்வொரு ராசியினருக்கும் இப்புத்தாண்டு வழங்கவிருக்கும் பலன்களைத் துல்லியமாகக் கணித்துத் தந்துள்ளோம். இதனால் எமது அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய, “தினகரன்” வாசக அன்பர்கள் பயன் பெறுவாரேயானால் அதுவே நாங்கள் பெறும் பேறாகும்.

கிரகங்களின் பிடியில் புத்தாண்டு…!

இப்புத்தாண்டு, சூரியனின் ஆதிக்கத்தில் வருகிறது! அதற்கு அடுத்தபடியாக, சந்திரனின் ஆதிக்கமே சக்திவாய்ந்ததாக இருப்பதைப் புராதன ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன.நம் நாட்டில் தேவைக்குச் சற்று அதிகமாகவே மழை பெய்யும். தானியங்களின் விளைச்சல் எதிர்பார்ப்பைவிடச் சற்று கூடுதலாகவே இருக்கும். அண்டை நாட்டினரால் பிரச்னைகள் அதிகரிக்கும். இந்திய , அமெரிக்க நாடுகளிடையே பரஸ்பர நட்பும், ராணுவ வியாபார ஒத்துழைப்பும் அதிகரிக்கும்.ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வரும். உக்ரைன் நாட்டின் ஓர் பகுதி ரஷ்யாவுடன் சேர்த்துகொள்ளப்படும்.

இப்புத்தாண்டில் கிரகணங்கள்!

இப்புத்தாண்டில், ஒரு சந்திர கிரகணம் மட்டும் நிகழ்கிறது. செப்டம்பர் 7, 2025 (ஆவணி 22) ஞாயிற்றுக்கிழமையன்று, சதய நட்சத்திரத்தில், பூரண சந்திரகிரகணம் நிகழ்கிறது.
கிரகண ஆரம்பம்: இரவு 9.51.
கிரகண முடிவு: பின்னிரவு 2.15.
சதயம், அவிட்டம், சுவாதி, திருவாதிரை, பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், சாந்தி செய்துகொள்வது அவசியம். அன்று பிற்பகல் 12.30 மணிக்குமேல், உணவருந்துதல் கூடாது.கிரகணத்தின்போது, உறங்கக்கூடாது.கருவுற்றிருக்கும் பெண்மணிகள் கிரகணச் சாயை குழந்தையைப் பாதிக்கும் என்பதால், கிரகண காலத்தில் வெளியே வரக்கூடாது. இக்காலத்தில், இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் மறைந்த முன்னோர்களையும் பூஜிப்பதும் தியானிப்பதும் மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது. கிரகண காலத்தில், பெரியோர்களுக்கு அளிக்கும் தானம் அளவற்ற பலனைத் தரும். மறைந்த முன்னோர்களுக்கு, தர்ப்பணம் கொடுத்து, பூஜை செய்வது அனைத்து பாபங்களையும் போக்க வல்லது. குடும்பத்தில் வறுமை நீங்கும், ஒற்றுமை வளரும். ஆேராக்கியம் அபிவிருத்தியடையும். ஸத்புத்திர பாக்கியம் கிட்டும்.

2025 ஆங்கிலப் புத்தாண்டின் விசேஷ தினங்கள்

ஜனவரி

1- ஆங்கிலப் புத்தாண்டு
10- வைகுண்ட ஏகாதசி
11- கூடாரவல்லி
12- நடராஜர் அபிஷேகம்,
விவேகானந்தர் ஜெயந்தி
13- போகிப் பண்டிகை, ஆருத்ரா தரிசனம்
14- தைப்பொங்கல்
15- மாட்டுப் பொங்கல், திருவள்ளூவர் தினம்
16- உழவர் திருநாள்
18- ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை
26- குடியரசு தினம்
28- போதாயன அமாவாசை
29- தை அமாவாசை

பிப்ரவரி

2- வசந்த பஞ்சமி
4- ரதசப்தமி
6- தை கிருத்திகை
11- தைப்பூசம்
26- மஹா சிவராத்திரி

மார்ச்

1- ராமகிருஷ்ண பரமஹம்சர் ஜெயந்தி
6- ஸ்ரீ ராகவேந்திரர் ஜெயந்தி
12- மாசி மகம், நடராஜர் அபிஷேகம்
13- ஹோலி பண்டிகை
14- காரடையான் நோன்பு,ஹோலி பண்டிகை
28- போதாயன அமாவாசை
30- யுகாதி, தெலுங்கு வருடப்பிறப்பு, வசந்த நவராத்திரி ஆரம்பம்

ஏப்ரல்

6- ஸ்ரீ ராம நவமி, வசந்த நவராத்திரி முடிவு.
10- மகாவீர் ஜெயந்தி,
மயிலை அறுபத்துமூவர்.
11- பங்குனி உத்திரம்
12- அனுமன் ஜெயந்தி
14- தமிழ்ப் புத்தாண்டு
21- நடராஜர் அபிஷேகம்
25- ரமணமஹரிஷி ஆராதனை
30- அட்சய திருதியை

மே

1- தொழிலாளர் தினம்
2- ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி
4- அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
11- நரசிம்ம ஜெயந்தி, குருபெயர்ச்சி
12- சித்ரா பௌர்ணமி, புத்த பூர்ணிமா,கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்
28- அக்னி நட்சத்திரம் முடிவு

ஜூன்

9- வைகாசி விசாகம்
24- போதாயன அமாவாசை

ஜூலை

1- ஆனி திருமஞ்சனம்
2- நடராஜர் அபிஷேகம், ஆனி உத்திரம்
7- சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம்
10- குருபூர்ணிமா
16- தட்சிணாயன புண்யகாலம்
24- ஆடி அமாவாசை
28- ஆடிப்பூரம், நாக சதுர்த்தி
29- கருட பஞ்சமி, நாக பஞ்சமி

ஆகஸ்ட்

3- ஆடிப்பெருக்கு
8- வரலட்சுமி விரதம்
9- ஆவணி அவிட்டம், ரிக் உபாகர்மா, யஜுர் உபாகர்மா, ரட்சாபந்தன்
10- காயத்ரி ஜபம்
11- ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை
15- சுதந்திர தினம்
16- கிருஷ்ண ஜெயந்தி, ஆடிக்கிருத்திகை
27- விநாயகர் சதுர்த்தி
28- ரிஷிபஞ்சமி

செப்டம்பர்

4- வாமன ஜெயந்தி
5- ஓணம் பண்டிகை
8- மஹாளயபட்சம் ஆரம்பம்
12- மஹா பரணி
21- மஹாளய அமாவாசை
22- நவராத்திரி ஆரம்பம்

அக்டோபர்

1- ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
2- விஜய தசமி, காந்தி ஜெயந்தி
18- துலாகாவேரி ஸ்நானம் ஆரம்பம்
20- தீபாவளி பண்டிகை
21- லட்சுமி குபேர பூஜை
22- கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்
27- கந்த சஷ்டி, சூரஸம்ஹாரம்

நவம்பர்

5- அன்னாபிஷேகம்
12- கால பைரவாஷ்டமி
17- முடவன் முழுக்கு,
சபரிமலை யாத்ரிகர்கள்
மாலை அணியும் நாள்

டிசம்பர்

3- திருவண்ணாமலை தீபம்
16- தனுர் மாத (மார்கழி) பூஜை ஆரம்பம்
19- அனுமன் ஜெயந்தி
30- வைகுண்ட ஏகாதசி

பொங்கலோ, பொங்கல்!!

14-1-2025 செவ்வாய்க்கிழமை, கிருஷ்ண பட்சம், பிரதமை திதி, பூச நட்சத்திரம், 1-ம் பாதத்தில், பகல் மணி 11.54-க்கு சூரிய பகவான், மகர ராசியில் பிரவேசிக்கிறார். அன்று காலை 8.22 முதல், 8.55 மணிக்குள் புதுப்பானை அலங்கரித்து, பூஜை செய்து, பொங்கல் பானை வைப்பதற்கு மிகவும் உகந்த சுப முகூர்த்த நேரமாகும். பகல் 10.30 மணிக்கு மேல், கோலமிட்டு, சூரிய பகவானுக்கு பொங்கல் அமுது செய்வித்து, தூப, தீபங்கள் காட்டி, நமஸ்கரிக்கவும். வீட்டில், ஐஸ்வர்யமும், ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், மனநிறைவும் பொங்கும்!மறுதினம் மாட்டுப் பொங்கல்! தங்கள் வாழ்நாள் முழுவதும், நமக்காகவே உழைக்கும், பெற்ற தாய்க்குச் சமமான பசுக்கள் மற்றும் அவற்றின் கன்றுகள், காளைமாடுகள் ஆகியவற்றை நீராட்டி, குங்குமமிட்டு, அலங்கரித்து, தூப, தீபங்கள் காட்டி, பொங்கலூட்டி, பூஜிக்கவும்.

எந்த இல்லங்களி்ல் பசுக்களும், கன்றுகளும் பூஜிக்கப்படுகின்றனவோ, அங்கு, தான் நித்தியவாஸம் செய்வதாக மகாலட்சுமி அருளியிருக்கின்றார். பசுக்கள் வசிக்கும் இடங்களில், தேவர்களும், அனைத்து தர்ம தேவதையும் எழுந்தருளியிருப்பதாக தர்ம சாஸ்திரம் அறுதியிட்டுக் கூறுகிறது.மாட்டுப் பொங்கலின் மறுதினம் “காணும் பொங்கல்” தினமாகும். அன்பு காட்டும் உறவினர்களையும், வயதிலும், அனுபவத்திலும் உயர்ந்த பெரியோர்களையும் சந்தித்து, அவர்களது ஆசியைப் பெறவேண்டிய புனித தினமாகும். பெரியோர்களது ஆசி, பெறற்கரிய பொக்கிஷமாகும். உங்களையும் உங்கள் சந்ததியினரையும் வாழவைக்கும்.

The post ஆசைகளை நிறைவேற்றும் ஆங்கிலப் புத்தாண்டு! appeared first on Dinakaran.

Read Entire Article