ஆசிரியர்கள், பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் 4 நாட்களுக்குள் இடைநீக்கம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

10 hours ago 4


சென்னை: மாணவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுப்பதற்கும், மாணவர்களை பாதுகாப்பதற்கும் அரசு வழங்கியுள்ள நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை 100 விழுக்காடு பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களை ஏற்கனவே தமிழக அரசு வழங்கி இருக்கிறது என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை முழுமையான அளவில் 100 விழுக்காடு அளவிற்கு அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். குறிப்பாக, அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் பொருத்தப்பட வேண்டும் எனவும், மாணவிகள் உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மாணவிகள் பயணம் செய்யும் பேருந்துகளில் பெண் உதவியாளர்களே பணிபுரிய வேண்டும் எனவும், பள்ளிகளில் எவ்வித பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் நடைபெறக்கூடாது என அரசு உறுதியாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். விதிமுறைகளை செயல்முறைப்படுத்துவதில், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மாணவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறை புதியநடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் 4 நாட்களுக்குள் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொல்லை அல்லது தாக்குதல் புகார் வந்தவுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முதல்கட்ட விசாரணை நடத்துவார். விசாரணையின் அடிப்படையில் நான்கு நாள்களில் இடைநீக்கம் நடைமுறைக்கு வரும்.இது காவல்துறையினர் மேற்கொள்ளும் சட்ட விசாரணைக்கு இணையாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவு தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.

 

The post ஆசிரியர்கள், பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் 4 நாட்களுக்குள் இடைநீக்கம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article