புதுடெல்லி,
தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா இணைந்த ஆசியான் - இந்தியா அமைப்பின் தற்போதைய தலைவராக லாவோஸ் உள்ளது. ஆசியான் - இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நாளை மறுநாள் நடக்கிறது. இதைப்போல கிழக்கு ஆசியா அமைப்பின் 19-வது உச்சி மாநாடும் அங்கு நடைபெறுகிறது.
இந்த மாநாடுகளில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அந்த நாட்டு பிரதமர் சோனக்சய் சிபன்டோன் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று பிரதமர் மோடி இந்த மாநாடுகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை லாவோஸ் புறப்பட்டு செல்கிறார். அங்கு அவர் மேற்படி 2 மாநாடுகளிலும் பங்கேற்கிறார். அத்துடன் இந்த மாநாடுகளுக்கு இடையே உறுப்பு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிரதமர் மோடியின் இந்த பயணம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியா தனது கிழக்கு சார்ந்த கொள்கையின் 10-வது ஆண்டை இந்த ஆண்டு கொண்டாடுகிறது. கிழக்கு சார்ந்த கொள்கை மற்றும் இந்தோ - பசிபிக் மீதான நமது பார்வையின் மைய தூணாக ஆசியானுடனான உறவுகள் உள்ளது. நமது விரிவான மூலோபாய ஒத்துழைப்பு மூலம் இந்தியா - ஆசியான் உறவுகளை ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு மறுஆய்வு செய்வதுடன், எதிர்கால திசையையும் வகுக்கும்.
கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் நம்பிக்கையின் சூழலைக் கட்டியெழுப்புவதற்கு கிழக்கு ஆசியா உச்சி மாநாடு பங்களிக்கும். இந்தியா உள்பட கிழக்கு ஆசியா உறுப்பு நாடுகளின் தலைவர்கள் தலைமையிலான இந்த மன்றமானது பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.