சென்னை : ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 48வது புத்தக கண்காட்சியில் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பபாசி செயலாளர் முருகன் தெரிவித்துள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 48வது புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 12ஆம் தேதி வரை 17 நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தக கண்காட்சியில், 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நாவல், சிறுகதைகள் மற்றும் இலக்கியங்கள் என லட்சக்கணக்கான புத்தகங்கள் 10 விழுக்காடு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
குறிப்பாக இந்த புத்தக கண்காட்சியில் தினகரன்- சூரியன் பதிப்பகத்திற்கு ஸ்டால் எண்: 329, 330 ஆகிய இரண்டு ஸ்டால்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி மற்றும் திராவிட இயக்க வரலாறு ஆகிய இரண்டு புத்தகம் அதிக அளவில் விற்பனையாகிவருகிறது. கடந்த 4 நாட்களில் 50,000திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 48வது புத்தக கண்காட்சியில் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பபாசி செயலாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஆங்கில புத்தாண்டு அன்று விடுமுறை என்பதால் புத்தக கண்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கும் இரவு வழக்கம் போல எட்டு மணிக்கு முடியும் ஆனால் இந்த புத்தாண்டை முன்னிட்டு ஒன்பது முப்பது மணி அளவில் முடிய இருக்கிறது.விடுமுறை தினத்தன்று வாசகர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பாக 80 மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் உள்ளனர்.
மேலும் ஒரு சிறப்பம்சமாக வாசகர்கள் நுழைவு சீட்டு வாங்கும் பொழுது அவர்களுக்கு இனிப்புகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாலை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சார்பில் இசை கச்சேரி நடைபெற உள்ளது. இந்த இசை கச்சேரியில் தமிழ் பாடல்கள் இலக்கிய பாடல்கள் இசைக்க உள்ளனர். பொதுமக்கள் இலவசமாக இந்த இசை கச்சேரியில் கண்டு களிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
* இன்றைய நிகழ்வு
தலைமை உரை சிறப்பு செயலாக்கத்திட்டத்துறை செயலாளர் தாரேஸ் அகமது பேச உள்ளார். அதனை தொடர்ந்து பெரிதினும் பெரிது கேள் என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா பேச உள்ளார்.
The post ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 48வது புத்தக காட்சியில் சிறப்பு ஏற்பாடு: பபாசி தகவல் appeared first on Dinakaran.