சென்னை
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' எனும் பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் பயணிக்கும் தி.மு.க. அரசு தமிழ்நாட்டில் மதச்சார்பின்மையை கடைப்பிடித்து சமய நல்லிணக்கத்தை ஆதரிக்கும் அரசாக விளங்குகிறது. மேலும் மக்களின் சமய நம்பிக்கைகளுக்கு உரிய மதிப்பளித்து பணிகளை சிரத்தையுடன் மேற்கொண்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை 2 ஆயிரத்து 392 கோவில்களில் திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
மேலும், 7 ஆயிரத்து 132 கோடி ரூபாய் மதிப்புள்ள 7 ஆயிரத்து 400 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன. திருத்தலங்களின் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக, 1,770 கோடி ரூபாய் செலவில் 19 கோவில் வளாகங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல்-அமைச்சரின் வழிக்காட்டுதல்களால் கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் உள்ளம் அறிந்து செயல்படும் முதல்-அமைச்சரின் நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியோடு கோவில்களில் வழிபட்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.