![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38077358-buttlerlose.webp)
நாக்பூர்,
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சுப்மன் கில் 87 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் அடித்து வெற்றிக்கு உதவினர். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் 15 ரன்களிலும், ரோகித் சர்மா 2 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். 19 ரன்னுக்குள் தொடக்க வீரர்கள் அவுட்டானதால் இந்தியா கடும் நெருக்கடிக்குள்ளானது. இதனையடுத்து 3-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லும், ஸ்ரேயாஸ் அய்யரும் கூட்டணி போட்டு அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில், "உண்மையிலேயே நாங்கள் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏனெனில் இந்த போட்டியின்போது நாங்கள் மிகச்சிறப்பாக ஆட்டத்தை தொடங்கி இருந்தோம். ஆனால் பவர்பிளே ஓவர்களிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் பெரிய ரன் குவிப்பை வழங்க முடியாமல் போனது.
இந்த போட்டியில் மேலும் ஒரு 40 முதல் 50 ரன்கள் அடித்திருந்தால் வெற்றிக்கு சாதகமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதேபோன்று இந்திய அணியின் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோரது பார்ட்னர்ஷிப்தான் வெற்றியை எங்களிடம் இருந்து பறித்தது. அடுத்த போட்டியில் நாங்கள் பலமாக திரும்புவோம்" என்று கூறினார்.