சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிக நீளம் கொண்ட கடற்கரையை பெற்றுள்ளது. 14 கடலோர மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் மற்றும் கிராமங்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன. இங்கு வாழும் மீனவர்களுக்கு வங்கக் கடல்தான் வாழ்வாதாரமாகும். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்ந்து நடைபெறுகிறது. அண்மைக் காலமாக, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 25-ம் தேதி கடலுக்கு சென்ற மூவாயிரத்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள், உரிய அனுமதியுடன் கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் ஐந்து ரோந்து படகுகளில் வந்து தாக்குதல் நடத்தி, 34 மீனவர்களை கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து மூன்று விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த நீதிமன்றம் 34 மீனவர்களில் 16 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் (இலங்கை பண மதிப்பில்) வீதம் அபராதம் விதித்து, அபராதம் கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
இதே போல, இரு படகு ஓட்டுநர்களுக்குக்கும், ஒரு படகு உரிமையாளருக்கும் தலா ரூ.60.50 லட்சம் அபராதம் விதித்து, இந்த அபராதத் தொகையை கட்டத் தவறினால் ஒராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. மேலும் 15 மீனவர்கள் படகு குறித்த ஆவணங்களை 10.02.2025ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, மூன்று விசைப் படகுகளை அரசுடைமையாக்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கை கடற்படையினர் சுட்டதில் சின்னக்குடி மீனவர் பாண்டியன் உயிரிழந்தார்.
மீன்பிடித்தல் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் 2008-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் உணர்வை இலங்கை அரசு அலட்சியம் செய்து வருகிறது. மத்திய அரசின் வெளியுறவுத்துறை அரசியல் உறுதியுடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு, தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.