![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38101429-4-aus-cricket-afp.webp)
காலே,
இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் அடித்திருந்தது. குசல் மென்டிஸ் 59 ரன்களுடனும், லஹிரு குமரா ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை தனது முதல் இன்னிங்சில் 257 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 85 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், குனமென், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஹெட் 21 ரன்னிலும், கவாஜா 36 ரன்னிலும், அடுத்து வந்த லபுஸ்சாக்னே 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இந்த இணையை பிரிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் திணறினர். நிதானமாக ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டது.
இறுதியில் 2ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 80 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 330 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா தற்போது வரை 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் அலெக்ஸ் கேரி 139 ரன்னுடனும், ஸ்டீவ் ஸ்மித் 120 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் நிஷார் பெய்ரிஸ் 2 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூரியா 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.