"அவர் தவழ்கின்ற குழந்தை.." - விஜய் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

2 days ago 2

சென்னை,

நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து மாநில மாநாடு, நிர்வாகிகள் நியமனம் ஆகியவற்றை நடத்தி கட்சியை வலுப்படுத்தினார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறார். இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், "இன்று தமிழ்நாடு இருக்கும் சூழலில் நாம் ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்கள் எல்லாரும் நன்றாக புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? இல்லை, ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழ வேண்டும் என்பது அரசியலா? எல்லாருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பது தானே அரசியல். அதுதான் நம்ம அரசியலும்.

மக்கள் பிரச்சினைகளை மடைமாற்றி, மக்கள் விரோத ஆட்சியை மன்னர் ஆட்சி போன்று நடத்தும் இவர்கள் நமக்கு எதிராக செய்யும் செயல்கள் ஒன்றா, இரண்டா?. மாநாட்டில் ஆரம்பித்தது, அடுத்தது நான் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு விழா, நான் பரந்தூர் வரை எத்தனை இடையூறுகள்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் போதாது. செயலிலும், ஆட்சியிலும் அதை காட்ட வேண்டும். மத்தியில் பா.ஜனதா ஆட்சியை பாசிச ஆட்சி என்று அறைகூவல் விடுத்துவிட்டு, இங்கு நீங்கள் பண்ணுகிற ஆட்சி மட்டும் என்னவாம்? அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சி தானே.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. இந்த நிலைமை மாற வேண்டும். அதற்கு இங்கு உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வரவேண்டுமானால் இவர்களை மாற்ற வேண்டும்.

மன்னராட்சி முதல்வரே, உங்கள் ஆட்சியை பற்றி கேட்டால், உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி இருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும். சட்டம்-ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். படிக்கிற பிள்ளைகள், சின்னப் பொண்ணுங்க, வேலைக்கு போகிற பொண்ணுங்க, வீட்டில் இருக்கிற பொண்ணுங்க என்று இவர்கள் எல்லாருக்கும் நடக்கிற கொடுமைகளை சொல்ல முடியவில்லை சார். இந்தநிலையில் உங்களை அப்பா என்று கூப்பிடுவதாக சொல்கிறீர்கள்.

தினம் தினம் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிற தமிழ்நாட்டு பெண்கள் தான் உங்களின் ஆட்சிக்கு முடிவு கட்ட போகிறார்கள். உங்களின் அரசியல் வாழ்க்கைக்கே ஒரு முடிவு கட்டப்போகிறார்கள். 2026-ம் ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்று த.வெ.க. இன்னொன்று தி.மு.க." என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "மன்னராட்சி காத்த கரங்கள், மக்களாட்சி காணும் எங்கள் நெஞ்சம். எங்களாட்சி என்றும் ஆளும். சக்திமயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது. பெண்கள் தான் 2026-ஆம் ஆண்டு இந்த ஆட்சியை தூக்கி பிடிப்பார்கள். முதல்-அமைச்சரை வரவேற்பதில் 80 சதவீதம் பெண்கள் தான் உள்ளனர். த.வெ.க. தலைவர் விஜய், ஒரு தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று வென்றவர்கள்" என்று அவர் கூறினார். 

Read Entire Article