
பர்மிங்காம்,
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 18 ரன்களுடனும் , ஹாரி புரூக் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 407 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இது இந்திய அணியை விட 180 ரன்கள் குறைவானதாகும். இங்கிலாந்து தரப்பில் ஜேமி சுமித் 184 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. அத்துடன், 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கே.எல்.ராகுல் 28 ரன்னுடனும், கருண் நாயர் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில்,. நேற்றைய ஆட்டம் முடிந்த பின்னர் ஆகாஷ் தீப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பயிற்சியாளராக (கம்பீர்) அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்தார். இந்திய அணியில் இணைந்தது முதல் ஒரு வீரருக்கு தேவையான தன்னம்பிக்கையை அவர் எனக்குக் கொடுத்து வருகிறார். அந்த தன்னம்பிக்கையே களத்தில் என்னுடைய செயல்பாடுகளில் பிரதிபலிக்கிறது.
அப்படி உங்களுடைய பயிற்சியாளர் உங்களை வலுவாக ஆதரிக்கிறார் மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் பேசுகிறார் என்பதை நீங்கள் அறிந்தால் தாமாக உங்களுக்குள் நம்பிக்கை வரும். அந்த நம்பிக்கை களத்திலும் வெளிப்படும். கம்பீர எப்போதும் நேர்மறையான விஷயங்களை சொல்வார். குறிப்பாக "உங்களிடமும் உங்களுடைய கைகளிலும் இருக்கும் திறமை உங்களுக்கே தெரியாமல் இருக்கிறது என்று அவர் சொன்னார்.
ஒரு வீரருக்கு அது போன்ற ஊக்கம் முக்கியமானது. உண்மையை சொல்ல வேண்டுமெனில் சில நேரங்களில் நம்மையே நாம் நன்றாக புரிந்து கொள்ள முடியாது. ஆனால் கம்பீர் போன்ற அனுபவமிக்கவர் அப்படி சொல்லும் போது உங்களுடைய தன்னம்பிக்கை இயற்கையாகவே அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.