
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 204 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன் எடுத்தார். டெல்லி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 62 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரேன் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது சுனில் நரேனுக்கு வழங்கப்பட்டது.
நடப்பு தொடரில் டெல்லி அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம் பிடித்துள்ளார். மெகா ஏலத்தில் அவரை ரூ. 10.75 கோடிக்கு டெல்லி வாங்கியது. இதன் காரணமாக அவர் டெல்லி பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடராஜனுக்கு இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இறுதிகட்டத்தில் யார்க்கர் பந்துகளை வீசி எதிரணியை கட்டுப்படுத்தும் திறமை கொண்ட நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, டெல்லி அணியின் ஆலோசகரான கெவிட் பீட்டர்சன் சில தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில்,
நடராஜன் சிறப்பாக விளையாடக்கூடியவர் தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு போட்டியில் இம்பேக்ட் வீரருடன் சேர்த்து 12 பேர்தான் விளையாட முடியும். இப்போது இருக்கும் அணியில் அவரை எங்கே விளையாட வைக்கலாம் என உங்களால் முடிந்தால் யோசனை சொல்லுங்கள். அது எங்களுக்கு உதவியாக இருக்கும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தடுமாற்றமாக பவுலிங் செய்யும் முகேஷ் குமாரை கழற்றி விட்டு நடராஜனுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியதாவது, கடந்தப் போட்டியில் டெல்லி மிகவும் மோசமாக விளையாடி தோற்றது. அப்போது ஸ்டார்க் ஓவரை மீதம் வைத்து உங்களால் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வி எழுந்தது.
அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே போல நடராஜன் விளையாடாததும் என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அது பற்றி கேட்டதற்கு நடராஜனுக்கு தங்களுடைய அணியில் இடத்தை உருவாக்க முடியவில்லை என்று கெவின் பீட்டர்சன் கூறியிருந்தார். அவருக்கு ஏன் உங்களால் வாய்ப்பு கொடுக்க முடியவில்லை?.
முகேஷ் குமாரை வெளியே வைத்து நடராஜனுக்கு வாய்ப்புக் கொடுங்கள். நீங்கள் அவரைப் 10 கோடிக்கு வாங்கினீர்கள். அப்படி 10 கோடிக்கு வாங்கிய ஒரு வீரருக்கு உங்களுடைய அணியில் இடத்தை கொடுக்க முடியாவிட்டால் அது கைத்தட்டல்களுக்கு தகுதியான செயலாகும். அவருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்து விளையாட வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.