மதுரை: தைப்பொங்கலை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நாளை (ஜன.14) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில், 1100 காளைகளை அவிழ்த்துவிட டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. 400 காளையர்கள் களத்தில் இறங்க டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, மதுரை அவனியாபுரத்தில் நாளை (ஜன.14) ஜல்லிகட்டு நடைபெற உள்ளது. இதற்காக மாநகராட்சி தரப்பில் ரூ.54 லட்சத்தில் முன்னேற்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
வாடிவாசல், சிறப்பு விருந்தினர் மேடை, சாலையின் இருபுறமும் 1.8 கி.மீ தூரம் 8 அடி உயரத்துக்கு இரண்டு அடுக்கு தடுப்பு வேலி மற்றும் காளைகளுக்கான இரும்பு வலை வேலிகள், காளை பரிசோதனை பகுதி என 80 சதவீத முன்னேற்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று ஆய்வு செய்தார். போலீசார் அறிக்கை: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வரும் உரிமையாளர் மற்றும் ஒருவர் காலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் ரோடு முல்லை நகரில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு வரவேண்டும்.
இங்கு 1,100 காளைகளை அவிழ்க்க டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. டோக்கன் பெற்றவர்கள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வரிசைப்படி அனுமதிக்கப்படுவர். ஒரு மணி நேரத்திற்கு 100 காளைகள் வீதம் அவிழ்க்கப்படும். 1,000 முதல் 1,100 வரை டோக்கன் பெற்றவர்கள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை அனுமதிக்கப்படுவர். இதேபோல் 1 மணிநேரத்திற்கு 50 வீரர்கள் வீதம் களம் இறங்குகின்றனர். காளைகள் அனுமதிக்கான நேரத்திற்கு முன்பாக வருவோர், அவற்றை ஆங்காங்கே தங்கள் பராமரிப்பில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
காளைகளின் உரிமையாளர்கள், மாவட்ட நிர்வாகம் வழங்கிய அனுமதி டோக்கன் மற்றும் தங்கள் ஆதார் அட்டையுடன் வர வேண்டும். போலி டோக்கன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மது அருந்தியவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வருவதற்கோ, காளைகளை பிடிப்பதற்கோ அனுமதி இல்லை. வாடிவாசலில் அவிழ்க்கப்பட்ட காளைகளை செம்பூரணி ரோடு தண்ணீர் தொட்டி அருகே உள்ள கலெக்ஷன் பாயின்ட் பகுதியில் இருந்து பிடித்துச் செல்ல வேண்டும். மேலும் பார்வையாளர்கள் தடுப்புகளை மீறி காளைகள் செல்லும் வழித்தடத்திற்குள் நுழையக்கூடாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலமேடு, அலங்காநல்லூர் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.15ல் பாலமேடு மஞ்சுமலை ஆற்றுத் திடல் மற்றும் ஜன.16ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 6ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்கி, 7ம் தேதி மாலை 5 மணியுடன் முடிந்தது. இதன்படி 12,632 காளைகளுக்கும், 5,347 மாடுபிடி வீரர்களும் களம் காண முன்பதிவு செய்துள்ளனர். இதன்படி அவனியாபுரத்தில் 2,026 காளைகள் 1,735 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதில், 1100 காளைகள், 400 வீரர்கள் களமிறங்க உள்ளனர். இதேபோல, பாலமேட்டில் 4,820 காளைகள் 1,914 வீரர்கள் அலங்காநல்லூரில் 5,786 காளைகள், 1,698 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
* பெரியசூரியூரில் 15ம் தேதி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கலன்று தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடத்தப்படும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்பர். இந்தாண்டு பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நாளை மறுநாள் (15ம் தேதி) நடக்கிறது.
The post அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு 1100 காளைகள், 400 காளையர் மல்லுக்கட்ட ரெடி appeared first on Dinakaran.