புதுச்சேரி: புதுச்சேரியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் இதுவரை நடந்துள்ள பணிகள் தொடர்பாக அத்திட்டத்தின் அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கினர். தொடர்ந்து புதுச்சேரி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட தலைமை செயல் அலுவலர் ஜெயந்த் குமார் ரே செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் கடந்த 2017-ம் ஆண்டில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.1,056 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பின்னர், பல்வேறு நிர்வாக மற்றும் நிதி காரணங்களால் திட்ட அளவு ரூ.612 கோடியாக குறைக்கப்பட்டது.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் 82 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இதுவரை 57 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 25 பணிகள் மார்ச் இறுதிக்குள் முடிக்கப்படும். முக்கியமாக இதில் 3 பணிகள் மட்டும் மார்ச் மாதத்துக்கு பிறகும் நீடிக்க வாய்ப்புள்ளது. குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, குடியிருப்பு வசதிகள், பழங்கால கட்டிடங்கள் புதுப்பிப்பு, போக்குவரத்து சார்ந்தவை ஆகியவை அடங்கும். குறிப்பாக ரூ.30 கோடியில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையம் விரைவில் முடிக்கப்படும்.