சென்னை: அவதூறு வழக்கிலிருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை ஏற்க கூடாது என கோரி சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதிமாறன் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.,யான தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை பழனிசாமி கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது தொகுதி நிதியில் 95 சதவீதத்தை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டு பட்டியலையும் வெளியிட்டிருந்தார்.
இந்த மனு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்ககோரி எடப்பாடி பழனிச்சாமி மனு தாக்கல் செய்திருந்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது தயாநிதிமாறன் சார்பாக வக்கீல் ஆஜராகி புதிய மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் புதிய சட்டத்தின் (பிஎன்எஸ்)படி இந்த வழக்கை விசாரிக்க முடியாது. பழைய சட்டத்தின் படி (இந்திய தண்டனை சட்டம்) இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். பழைய சட்டத்தின் படி சாட்சி விசாரணை தொடங்க உள்ள நிலையில் வழக்கிலிருந்து விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்ய முடியாது.எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. இதை ஏற்கக் கூடாது . இதை நிராகரிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
அப்பொழுது எடப்பாடி பழனிச்சாமி சார்பில் வழக்கறிஞர் அய்யப்பராஜ் ஆஜராகி எடப்பாடி பழனிச்சாமி சார்பாக மூத்த வக்கீல் ஆஜராக இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கூறினார். இதை ஏற்ற நீதிபதி விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post அவதூறு வழக்கிலிருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்க கூடாது : தயாநிதிமாறன் மனு appeared first on Dinakaran.