அவசரம் ஏன்?

3 months ago 23

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. குழு அளித்த பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வதற்காக ‘செயல்படுத்தும் குழு’ ஒன்றை அமைக்கவும் குழு முன்மொழிந்தது. மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்திய தேர்தல் ஆணையம் பொது வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை தயாரிக்கவும் இக்குழு பரிந்துரைத்தது. தற்போது, மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பொறுப்பேற்றுள்ளது. அதே நேரத்தில் நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல்களை மாநில தேர்தல் ஆணையங்கள் நடத்துகின்றன.

இந்நிலையில், `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான உயர்மட்ட குழு, 18 அரசியலமைப்பு திருத்தங்களை பரிந்துரைத்தது. ஒற்றை வாக்காளர் பட்டியல் மற்றும் ஒற்றை வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான மாற்றங்களுக்கு குறைந்தது பாதி மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த தனது அறிக்கையை சட்ட ஆணையம் விரைவில் கொண்டு வர வாய்ப்புள்ளது. மக்களவை, சட்டப்பேரவைகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய அரசாங்கத்தின் 3 அடுக்குகளுக்கும் 2029 முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், தொங்கு நாடாளுமன்றம், சட்டமன்றம் ஏற்பட்டால், ஒன்றிணைந்த அரசாங்கத்துக்கான ஏற்பாடுகளை செய்யவும் சட்ட ஆணையம் பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் ஒன்றிணைந்த அரசு என்பது இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தும்.

1967 வரை மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒன்றாகத்தான் தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் சில மாநில அரசுகள் கலைக்கப்பட்டு புதிய மாநிலங்கள் உருவானது உள்ளிட்ட காரணங்களால் மக்களவைக்கும் பல மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் வெவ்வேறு நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது. இந்த திட்டத்துக்கு அரசியல் கட்சிகளின் கருத்தொற்றுமையை பெற முடியவில்லை. இத்திட்டத்துக்காக சில மாநிலங்களின் சட்டமன்ற பதவி காலத்தை குறைக்கவும் சில மாநிலங்களில் நீட்டிக்கவும் வேண்டியிருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அவற்றின் பதவி காலத்துக்கு முன்பாகவே கலைப்பது மக்களாட்சி தத்துவத்துக்கு முரணானதாக கருதப்படும். இத்திட்டம் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இத்திட்டத்துக்கான 3 மசோதாக்களை, வரும் நாடாளுமன்ற கூட்ட தொடரிலேயே தாக்கல் செய்ய ஒன்றிய அரசு தீவிரமாக உள்ளது. முதலாவது சட்டம், மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு அரசமைப்பு திருத்த சட்டமாக இருக்கும்.

2வது சட்டம், உள்ளாட்சி தேர்தல்களை மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களுடன் இணைத்து நடத்துவதற்கு அரசமைப்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கு 50% மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும். 3வது சட்டம், புதுச்சேரி, டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கான பதவிக்காலத்தை மற்ற சட்டப்பேரவை பதவிக்காலத்துடன் ஒத்திருக்கும்படி மாற்ற இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கல்கள் நிறைந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அவசரம் காட்டுவது ஏன் என மில்லியன் டாலர் கேள்விகள் எழுகிறது.

The post அவசரம் ஏன்? appeared first on Dinakaran.

Read Entire Article