அழிவின் துவக்கம்

1 week ago 2

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நேற்று முன்தினம் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை அவமதித்து வீடியோ ஒளிபரப்பு செய்தது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எப்படியாவது தமிழ்நாட்டில் பாஜவின் வாக்குவங்கியை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நடத்தப்பட்ட மாநாட்டில் இதுபோன்ற விஷயங்கள் அரங்கேறியதில் ஆச்சரியமில்லை. ஆனால், இந்த மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, கடம்பூர்ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்று இருந்தனர். இந்த வீடியோ திரையில் ஒளிபரப்பானபோது, அவர்கள் எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அமைதியாக வீடியோவை பார்த்துள்ளனர். மாநாடு நிறைவு பெற்ற நிலையில் அண்ணா, பெரியார் குறித்து முருகர் மாநாட்டில் எழுந்த விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்சியின் பெயரிலேயே அண்ணாவின் பெயரை கொண்டுள்ள அதிமுகவின் மூத்த தலைவர்களே இப்படி சங் பரிவாரின் கைப்பாவைகளாக நடந்து கொண்டது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவினர் கூட்டணி என்ற பெயரில் பாஜ, இந்துத்துவா சக்திகளின் கொத்தடிமைகளாக மாறிவிட்டதை உலகிற்கு இந்த நிகழ்வு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. முருகன் மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் மதசார்பின்மை பற்றி பேசும் தகுதியையே அதிமுக இழந்துவிட்டது. சிறுபான்மை சமூகத்தினரிடம் இருந்து அதிமுக முற்றிலும் விலகி அந்நியமாகி போனதை இந்த நிகழ்வு எடுத்து காட்டியுள்ளது. தங்கள் எஜமானர்களுக்கு பயந்து பெரியார், அண்ணாவுக்கு அநீதி இழைக்கப்படுவதையே எதிர்த்து குரல் கொடுக்காத அதிமுகவினர் தங்கள் நலன்காக்க எதுவுமே செய்ய மாட்டார்கள் என்ற முடிவுக்கு சிறுபான்மை சமூகத்தினர் வந்துவிட்டனர். இதேபோலதானே தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கும் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசுக்கும் அதிமுக ஒத்து ஊதும் என்ற எண்ணம் தமிழர்களிடையே ஏற்பட்டுள்ளது.

சமத்துவம், சகோதரத்துடன் அனைத்து சமூகத்தினரும் வாழும் தமிழ்நாட்டில் இம்மாநாட்டின் மூலம் ஓட்டுகள் கவர முடியும் என நினைப்பது கானல் நீராக தான் இருக்கும். படிப்பு, பகுத்தறிவு நிறைந்த இம்மண்ணில் மத ரீதியாக பிளவுப்படுத்தி அதன்மூலம் இந்துக்களை வைத்து ஓட்டுவங்கி அரசியல் இங்கு செய்ய முடியாது. ஒன்றிய அரசின் ஈடி, வருமான வரித்துறை, சிபிஐ ரெய்டுக்கு பயந்து தான் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதாக சாதாரண பொதுமக்களுக்கும் தெரிந்துள்ளது. அண்ணா பெயரில் கட்சி வைத்திருக்கும் அதிமுக, அண்ணா தொடர்பான சர்ச்சை வீடியோவுக்கு கடும் எதிர்ப்பை தெரியப்படுத்தவில்லை. அதிமுகவின் கொடியில் அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கே அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா? என திமுக கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் கோவை பேரூர் ஆதினத்தில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியும் பங்கேற்றது மற்றொரு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, தொடர்ந்து பல்வேறு சர்ச்சையில் சிக்கி சங்கி கட்சியாக மாறி வருகிறது. பாஜவுக்கு அரசியல் ரீதியாக ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காக தங்கள் கட்சியின் நலனுக்கு விரோதமாக தலைவர்கள் செயல்படுவது நல்லதல்ல. இந்த சறுக்கல் அதிமுக அழிவின் துவக்கம்.

The post அழிவின் துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article