சிவபெருமான் தமது சடையில் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து, நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் “மதுரை” எனப் பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குள்ளேயும், கோயிலுக்கு வெளியேயும் பலமண்டபங்களில் முக்கியமாக பார்க்க வேண்டியதில் “ஆயிரம் கால் மண்டபம்” கலைகளின் பொக்கிஷமாக விளங்குகிறது.
கோயில் நிர்வாகம் சார்பாக “அருங்காட்சியகமாகவும்” நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயிலின் நான்கு பெரிய கோபுரங்களில், மொட்டைக் கோபுரம் என்றழைக்கப்படுகிற வடக்குக் கோபுரம் வாசல் வழியாக உள்ளே சென்றால், ஆயிரம் கால் மண்டபத்தை அடைய முடியும். விஜயநகர மன்னர்கள் வம்சத்தில் கிருஷ்ண வீரப்ப நாயக்கர் ஆட்சியில் அமைச்சராக இருந்த “தளவாய் அரியநாத முதலியார்’’ மேற்பார்வையில் ஆயிரம் கால் மண்டபம் கி.பி.1569 ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது.
அவருடைய திருவுருவச்சிலையும் ஒரு தூணில் உள்ளது. நாயக்கர் ஆட்சிசெய்த காலத்தில், உத்தியோகப் பூர்வமான கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும் இந்த ஆயிரம் கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது என்ற செய்தி கிடைக்கின்றன? ஒரு மிகப் பெரிய பாறையிலிருந்து வெட்டி கூடமாகவும், சிற்பங்களாவும் பிரித்து செதுக்கி வடிக்கப்பட்டிருக்கிறதாகவும் தகவல் உலா வருகிறது. இக்கோயிலில் உள்ள பலமண்டபங்களில் இதுதான் பெரியதாகும். சுமார் ஐந்தாயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது!
மீனாட்சி கோயிலின் அஷ்டசக்தி மண்டபம் (எ) அம்மன் சந்நதி வழியாக சென்று, அன்னதானம் மண்டபம் ஒட்டி வலது திரும்பி நேராகப் பார்த்தால், ஆயிரம் கால் மண்டபத்திற்கு பிரதான வழியாக (தற்போது இந்த வழியாக செல்ல முடியாது) நுழைந்தவுடன் எதிரே நடுநாயகனாக நடராஜப் பெருமான் சிவகாமியுடன் காட்சி தருகிறார். இம்மண்டபத்தின் உள்ளே காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது.
முன்வரிசைத் தூண்களிலும், நடுமண்டபத் தூண்களிலும் “சிற்பங்கள் அருந்தவம் செய்வது” போலிருக்கிறது. நீங்கள் எங்கு நின்று பார்த்தாலும், தூண்கள் ஒரே நேர்க் கோட்டில், வரிசையாக தெரியும். அத்துடன் அலங்கார விளக்குகளின் ஒளியில் சிற்பங்களின் அழகுக்கு அழகு சேர்கிறது!
ஒவ்வொரு தூண்களும் மேற்கூரையை தாங்கும் விதமாக தோராயமாக பனிரண்டு அடிக்கும் மேல் உயரம் கொண்டிருக்கிறது. அந்த தூண்களை பிணைந்த சிற்பங்கள் எட்டடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டிருக்கிறது. இங்கு சில சிற்பங்களின் கை, கால் பகுதிகளில் சிதலமடைந்திருக்கிறது, அரிதான நாதம் பிறக்கின்ற சிலசிற்பங்களும் உள்ளது தவிர ஆண், பெண், துறவிகள் போன்ற சிற்பங்களும் அக்கால கலாச்சாரத் தோற்றம், ஆடை, ஆபரணங்களையும் எடுத்துக் காட்டுகிறது. சிற்பங்களின் முகத்தோற்றமும், அதனுடைய உடற்கட்டமைப்பும், எப்படி மனித உடலில் கை, கால்களில் நரம்புகள் புடைத்திருப்பது போன்று இங்குள்ள சிற்பங்களிலிலும் தெளிவாக பார்க்க முடிகிறது! இம்மண்டபத்தின் மேற்குப் புறத்தில் இடது பக்கம் சப்தஸ்வரங்கள் நாதம் எழுப்பும் வட்ட வடிவில் கல்லிலாலான “இசைத் தூண்கள்” பாதுகாக்கப்படுகிறது.
ஒரு சிற்பத்தை மட்டும் ஓரிரு வார்த்தையால் சொல்லிவிட்டு கடந்து செல்ல முடியாது “ஒரு மங்கையின் சிற்பம்” அதில் அவள் வீணை வாசிக்கும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம்?! உடலை வளைத்து, நெளிந்தும் கொண்டும் நிற்கிறாள், கழுத்து முதல் கால் தொடையையும் தாண்டி முட்டி வரை தொங்கும் பெரிய மரகத மாலை கண்ணைப் பறிக்கிறது. மெல்லிய ஆடையின் மடிப்பும், கலையாமல் தழுவியிருப்பது கண்கூடாக ஈர்க்கிறது!
அவளது பின்னந்தலையில் பக்கவாட்டில் பெரிய கொண்டை, நடுவடு எடுத்து அதில் நெற்றிச் சுட்டி, காதில் பெரிய ஓட்டையுடன் தொங்கட்டான் தொங்குகிறது. கழுத்து, மார்பிலும் முத்து மாலைகள், இரண்டு கைகளில் வங்கி, மோதிரங்கள், வளையல்கள் நிறைந்து அணிந்திருக்கிறாள். அவளது வலது தோளில், கிளி கொண்டையை கொத்தி நிற்கிறது. வீணையை இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டும், வீணையின் கம்பிகள், கட்டைகள் கல்லில் தெரிகிறது.
அதில் விரல்களின் நகம் முதற்கொண்டு கூர்ந்து பார்க்க முடிகிறது. விரல்கள் மீட்டி எழுப்பும் அந்த இசையை நாம் கேட்டிருந்தால், லயித்திருப்போம் அல்லவா? அப்படியொரு காட்சியை சிற்பத்தில் வடித்திருப்பதை பார்க்க முடிகிறது. ஒருவேளை அரச குலத்தைச் சேர்ந்த மங்கையாக இருப்பாளோ? இல்லை. அவள் கலைமகள், “சரஸ்வதி தேவியின் திருவுருவச் சிற்பம்” என அறிய முடிகிறது!!! இம்மண்டபத்தின் முகப்பில் தொடங்கி கடைசி வரை சிறிய தூண்கள், பெரிய தூண்களாகவும் அமைந்திருக்கின்றன, ஒவ்வொன்றும் புராணக் கதைகளை சொல்லும் வகையில் வடிக்கப்பட்டிருக்கிறது.
சிவனாரின் திருவுருவத்தில் அங்கம் வெட்டிய திருவிளையாடல் புராணத்தைக் குறிக்கிறது. கண்ணப்ப நாயனார் ஒரு காலைச் சிவலிங்கத்தின் மேல் வைத்துக் கொண்டு, தன்னுடைய கைகளால் கண்ணைத் தோண்டுவதை சிவகோசரியார் மறைந்திருந்து கவனிப்பது போன்று காட்டப்படுகிறது. சந்திரமதி, தன் இறந்த குழந்தையைத் தாங்கிக் கொண்டு முகவாட்டத்துடன் நிற்பதையும், அந்த முகத்தில் சோகம் வழிகிறது, குறவன் உழைத்து சம்பாதித்த பயனால் பல அணிகலன்களை பூண்டியிருக்கும் காட்சியை படம் பிடித்தாற் போல செதுக்கப்பட்டிருக்கிறது. பெண்மணி ஒருவர், ஒருபிள்ளையைத் தோளிலும், ஒருபிள்ளையை மடியிலிலும் ஒரு பிள்ளையை கூடையிலிலும் வைத்திருக்கிறாள். அந்த கூடையைக்கூட அத்தனை தத்ரூபமாக காட்டியிருப்பது சான்சே இல்லை..! அரியநாத முதலியார் அழகிய குதிரையில் அமர்ந்திருக்கிறார்.
அரிச்சந்திரன், பிட்சாடனர் போன்ற ஒவ்வொரு சிற்பங்களையும் கண்நிறைந்து பார்க்க என்ன பாக்கியம் பெற்றிருக்கிறோம்?! இடைஇடையே உள்ள தூண்களில் சிம்மயாளி மற்றும் யானைமுகயாளிகள் கொண்ட தூண்கள் மற்றும் பூமாலைகளுடன் தோரணங்கள் செதுக்கிய தூண்கள், சிற்பம் இல்லாத தூண்களும் அமைந்திருக்கின்றன. பாண்டியன், சிவவீரன், அமுத கலசத்தையுடைய நிருத்தகணபதி, துவாரக பாலகர்கள், சுப்பிரமணியர், நாகராஜன் தலையில் ஐந்து தலைநாகம், திருமால், பேடிவடிவ அர்ச்சுனன், திரௌபதி போன்று அமைந்த சிற்பங்கள் ஒவ்வொன்றும் அதன் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றன. ஒரு ஆண், ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு நிற்கும் சிற்பம், தர்மர், பீமன், ரதி, வீரபத்திரர் மற்றும் அக்கினி வீரபத்திரர் ஆகிய சிற்பங்கள் ரசனைகளுக்கு சவால் விடுகின்றன!
அன்னவாகனத்தில் அமர்ந்திருக்கும் ரதியின் தோற்றம் அவளது இளைமைக் காலத்தை வெளிப்படுத்துகிறது. எதிரே கையில் கரும்புடன் மன்மதன் காதலைக் கண்களாலும், உடல் மொழியாலும்
சொல்வதைப் பார்க்க முடியும்! இந்த ஆயிரம் கால் மண்டபத்திலே வலது பக்கம் 26 சிற்பங்கள், இடது பக்கம் 26 சிற்பங்கள் மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொரு சிற்பங்களும் அக்காலத்து நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் கிஞ்சிற்றும் குறையாமல் பறைசாற்றுகின்றன. மதுரையில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் மற்றும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் மீனாட்சி கோயில் எப்படி இருந்திருக்கும் என்கிற கோணத்தில் கருப்பு, வெள்ளை மற்றும் வண்ணங்களிலும் புகைப் படங்களாக தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே பல்வேறு காலத்தை சார்ந்த தெய்வ கற்சிலைகள், ஐம்பொன் சிலைகள், புத்தர்சிலை, கைவினைப் பொருட்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள், வேறெங்கும் காணமுடியாது.
மதுரை கோயில் கணக்கு வழக்குகள் தாங்கிய 1898-ஆம் ஆண்டின் ஓலைச் சுவடிகள் பத்திரமாக கண்ணாடிக் கூண்டில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் மையப்பகுதியில் மீனாட்சி திருவுருவம் மற்றும் திருத்தேர் மரத்தினால் செய்யப்பட்டு பார்வைக்கு உள்ளது. மீனாட்சி கோயில் கிழக்குக் கோபுரத்தின் சிற்பங்களுடன் கூடிய மரத்தினால் செய்யப்பட்ட பழங்கால கதவுகள் பார்வைக்கு உள்ளது. மேலும், “மினியேச்சர் வடிவத்தில் கழுகுப் பார்வையில் மீனாட்சி கோயில்” பார்க்கலாம். சேந்தன் மாறன் என்கிற மன்னன் தனது பெயரால் வைகையாற்றில் பாசன வசதி செய்த தகவல் அடங்கிய 6-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிராமி கல்வெட்டு 1961-ஆண்டில் வைகையாற்றில் கண்டெடுக்கப்பட்டது, அதுவும் இங்கு பாதுகாக்கப்படுகிறது.
அறுபத்து நான்கு திருவிளையாடல் புராணக்கதைகள் கூறும் பழங்கால மூலிகை ஓவியங்கள் ஒவ்வொரு தலைப்பிலும் அதற்குரிய படத்துடன் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.தமிழ் வருடம் 60 ஆண்டுகளை குறிக்கும் சக்கரம் மேல் உத்திரத் தளத்தில் (மேல் விதானத்தில்) செதுக்கப்பட்டுள்ளது. கிழக்கிந்திய நாணயம், டச்சு, போர்த்துக்கீசியர், நான்காம் வில்லியம் நாணயம் மற்றும் செம்பு, பொன் நட்சத்திர வராகன், ராஜராஜ சோழன் கால நாணயம், சோழர் காலம் போன்ற பழங்கால நாணயங்கள் பார்ப்பதற்கும் ஒரு அரிய வாய்ப்பு என்று சொல்ல முடியும்!
மதுரையை இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட விஜயநகரப் பேரரசு நாயக்கர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சிற்பக்கலை, பாரம்பரிய கட்டடக்கலை, கோயில் கட்டடக்கலை போன்ற பல்வேறு கலைசார் மரபுகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தின் சான்றாக “ஆயிரம் கால் மண்டபம்” விளங்குகிறது. அடுத்த முறை மீனாட்சி கோயிலுக்கு செல்லும் போது, அவசியம் ஆயிரம் கால் மண்டபத்திற்கும் செல்லுங்கள். பொழுது போக்க என்றில்லாமல், நிதானமாக ரசித்துப் பாருங்கள்.இதன் தொன்மையும், பழம்பெருமையும் தாங்கிய உங்கள் உடலெங்கும் உள்ளுணர்வுகளை தூண்டிவிடும். சிலாகிப்பீர்கள், பெருமிதம் கொள்ளச் செய்யும், அந்த பிரமிப்பிலிருந்து வெளியேவர சிலநிமிடங்களாவது ஆகும்.
மதுரை.ஆர்.கணேசன்.
The post அழகிய ஆயிரங்கால் மண்டபம்! appeared first on Dinakaran.