சென்னை,
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்' படத்தின் மிகப்பெரிய வவர்வேற்பை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகமான 'புஷ்பா 2 தி ரூல்' வெளியாகி உள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படம் கடந்த 5-ந் தேதி வெளியானது. அதற்கு முந்தைய நாள் அதாவது 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்ட புஷ்பா 2 படத்தை பார்க்க அல்லு அர்ஜுன் சென்றார்.
இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோத, அங்கு புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜா (வயது 9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கினர். இதில், ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, அல்லு அர்ஜுன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் வெளியே வந்தார். இந்நிலையில், அல்லு அர்னுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து தெலுங்கானா போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.