ஸ்பேடெக்ஸ் திட்ட வெற்றி, சந்திரயான்-4 திட்டத்திற்கு நிறைய உதவும் - மயில்சாமி அண்ணாதுரை

2 hours ago 3

பெங்களூரு,

விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் விண்வெளி டாக்கிங் பரிசோதனைக்காக இஸ்ரோ 2 செயற்கைக்கோள்களை வடிவமைத்தது.

'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என பெயரிடப்பட்ட தலா 220 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள்களை விண்ணில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் செலுத்தி, விண்வெளியில் 2 செயற்கைக்கோள்களையும் இணைய வைக்கும் கடுமையான பரிசோதனையில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது. இதற்காக ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட், 2 செயற்கைக்கோள்களை சுமந்தபடி கடந்த 30-ம் தேதி விண்ணில் பாய்ந்தது.

திட்டமிட்டபடி ராக்கெட்டின் இரு பாகங்கள் அடுத்தடுத்து பிரிந்தன. ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடம் 15 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-பி செயற்கைக்கோள் 475 கிலோ மீட்டரிலும், 15 நிமிடம் 20 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-ஏ செயற்கைக்கோள் 476 கிலோ மீட்டரிலும் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிலைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. இதன்படி இரு செயற்கைக்கோள்கள் இடையேயான தூரம் 230 மீட்டர் தூரத்தில் இருந்து 15 மீட்டராக குறைக்கப்பட்டு, பின்னர் 3 மீட்டராக குறைக்கப்பட்டது. தீவிர ஆய்வுக்கு பிறகு இரண்டையும் இணைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விண்வெளி டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் வழியே 2 செயற்கைக்கோள்களும் ஒன்றிணைக்கப்பட்டன. ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இதனை மேற்கொள்ளும் 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றியால் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

செயற்கைக்கோள்களை இணைக்கும் பணி மற்றும் நிலைப்படுத்தும் பணியும் வெற்றி பெற்று உள்ளது. செயற்கைக்கோள்களை இணைத்த பின்னர், அவற்றை கட்டுப்படுத்தும் பணியும் வெற்றி பெற்றுள்ளது. வரவிருக்கிற நாட்களில், செயற்கைக்கோள்களை பிரிக்கும் பணி மற்றும் மின்சார பரிமாற்ற சோதனைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. விண்ணில் செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றது பற்றி இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும்போது, நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சாதனையை செய்து முடித்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த செயற்கைக்கோள்களை இணைக்கும் பணியின் வெற்றியை தொடர்ந்து, அதன் முக்கியத்துவம் பற்றி வருகிற வருடங்களில் தெரிய வரும். இந்த திட்டத்தின் வெற்றியானது, சந்திரயான்-4 திட்டத்திற்கு நிறைய உதவும். விண்வெளியில் கிடக்கும் குப்பைகளை நீக்குவதற்கும் உதவ முடியும் என இந்த திட்டம் நிரூபிக்கும். உண்மையில் இது ஒரு நல்ல சாதனையாகும் என கூறியுள்ளார்.

Read Entire Article