சென்னை,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளாருமான பி.ஆர்.சுந்தரம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 73. பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் மறைந்ததை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சுந்தரம் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாது அதற்கு முன்பும் பல்வேறு நிலைகளில் பல பொறுப்புகளில் சிறப்பாக மக்கள் பணி ஆற்றி வந்தவர் ஆவார். 2021-ம் ஆண்டு முதல் திமுகவில் இணைந்து, கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும் சுந்தரம் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அரசியல் இயக்க நண்பர்கள், நாமக்கல் மாவட்ட மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.