அலைமகளை ஆலிங்கனம் செய்த திருவாலி பெருமாள்

1 week ago 4

வைணவ திவ்ய தேசங்கள் 108. அதில் சோழ நாட்டுத் தலங்கள் 40. இதில் சில தலங்கள் இரட்டை திருப்பதிகளாக இருக்கும். திருமங்கை ஆழ்வார் அவதரித்த திருநாங்கூர் திருப்பதிகளிலே ஒரு இரட்டைத் திருப்பதி இருக்கிறது. இரட்டை திருப்பதி என்பது இரண்டு தலங்களாக இருந்தாலும் கணக்கில் ஒரு தலமாகவே வரும் அப்படிப்பட்ட ஒரு திருப்பதி தான் சோழ நாட்டிலே திருநாங்கூர் திவ்ய தேசத்தில் இருக்கக்கூடிய “திருவாலி திருநகரி”.

சின்ன கிராமம். சுற்றிலும் வயல் வெளிகள். இந்த ஊருக்கு அருகாமையில் உள்ள திருக்குறையலூர் கிராமத்தில்தான் 1400 வருடங்களுக்கு முன்னால் திருமங்கை  ஆழ்வார் அவதரித்தார்.

அஷ்டாக்ஷர மந்திர விமானம்

இத்தலம் பஞ்ச நரசிம்ம தலங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார் ஆராதித்த ஐந்து நரசிம்ம மூர்த்திகளில் இவரும் ஒருவர். இவரைத்தான் “ஆலி நாட்டு அரசே’ என்று ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். மிக அற்புதமான தலம். பெரிய ராஜகோபுரம் கிடையாது ஒரே ஒரு பிரகாரம் தான்.

பக்கத்திலேயே ஒரு அருமையான தீர்த்தம் இருக்கிறது. தாமரை பூக்களும் தாமரை இலைகளும் வளர்ந்த அந்த தீர்த்தத்திற்கு இலாட்சணிபுஷ்கரணி என்று பெயர் இங்கே தான் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். கருவறையின் மீது அழகான விமானம் அந்த விமானத்திற்கு எட்டெழுத்து மந்திர விமானம் அதாவது அஷ்டாக்ஷர மந்திர விமானம் என்று பெயர் அந்த விமானத்தை பார்த்தாலே திருமந்திரத்தினுடைய அர்த்தம் சித்திக்கும். இதைப் பார்த்துதான் “நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்” என்று திருமங்கை ஆழ்வார் பங்களாசாசனம் செய்திருக்கின்றார்.

லட்சுமி நரசிம்மமூர்த்தி

கருவறைக்குள் லட்சுமி நரசிம்மமூர்த்தி காட்சி தருகின்றார். மகாலட்சுமியை வலது மடியில் வைத்துக்கொண்டு அன்பான அருளான முகத்தோடு காட்சி தருகின்றார். தாயார் இருகை தொழும் வண்ணம் அற்புதமாக காட்சி தருகின்றார். பெருமாளுக்கு “வயலாளி மணவாளன்” என்று திருநாமம்.

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்
புகுந்ததன்பின் வணங்கும் என்
சிந்தனைக்கு இனியாய்! திருவே! என்ஆர் உயிரே!
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளந்தளிர்கள் கலந்து
அவை எங்கும் செந் தழல் புரையும் திருவாலி அம்மானே!
என்று அழகு தமிழில் ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

வீற்றிருந்த திருக்கோலம். வலது திருவடி மடித்து தாயாரை வைத்துக் கொண்டிருக்கிறார். இடது கரம் கீழே இடது தொடையில் வைத்து பத்மத்தில் பதிந்து கிடக்கிறது சதுர் புஜனாக காட்சி தருகின்றார். மேலே உள்ள இரண்டு கரங்களில் ஆழியும் சங்கும் காட்சி தருகின்றன. உற்சவர் இருக்கின்றார். அவருக்கு திருவாலி நகராளன் என்று திருநாமம். தாயாருக்கு அம்ருத கடவல்லி என்று திருநாமம்.

உற்சவர் தேவி பூதேவி சமேதராக சங்கு சக்கர கதையோடு காட்சி தருகின்றார் அருகில் செல்வர் வீற்றிருக்கின்றார். ஆதிசேஷன் மடியில் ஆலிலைக் கண்ணனையும் இங்கே தரிசிக்கலாம்.
கருவறைக்கு அடுத்த அர்த்த மண்டபத்திற்கு வந்தால் பிரத்யட்சம் பெற்ற பிரகலாதனையும் பூர்ண மகரிஷியையும் காணலாம். மகா மண்டபத்தில் ஆழ்வாராதிகளோடு எம்பெருமானார் எழுந்தருளி இருக்கிறார் சந்நதியின் தென்கிழக்கில் கிணறு வசதியுடன் மடைப்பள்ளி. அதனை ஒட்டி பண்டார அறை இருக்கிறது இடது புறம் மணவாள மாமுனிகள் சந்நதியும் யாகசாலை மண்டபமும் பார்க்கலாம். நடுவில் வைகானச சாஸ்திரப்படி அமைந்த கருடன் சந்நதி. கொடிமரம் பலிபீடம்.

இந்த திருத்தலத்திற்கு இன்னொரு சிறப்பு என்ன என்று சொன்னால் திருமங்கை ஆழ்வாரை திருத்தி பணிகொண்டு ஆழ்வாராக்கிய குமுத வல்லி நாச்சியார் வளர்க்கப்பட்ட இடம்.
இந்த திருத்தலத்திற்கு அருகாமையில் (4 கி.மீ) திருநகரி என்கிற திவ்யதேசம் இருக்கின்றது அது மிகப்பெரிய திவ்ய தேசமாக விளங்குகிறது. இங்குள்ள வயலாளி மணவாளன் திருநகரியில் இப்பொழுது காட்சி தருகின்றார். இந்த இரண்டு தலத்தையும் சேர்த்து ஒரே தலமாக திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கின்றார். மொத்தம் 42 பாசுரங்கள் மங்களாசாசனம். குலசேகர ஆழ்வார் இத்தலத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்திருக்கின்றார்.

பஞ்ச நரசிம்ம தலங்களில் ஒன்று இங்கே ஐந்து நரசிம்ம ஷேத்திரங்கள் இருப்பதாகப் பார்த்தோம் அல்லவா. அதில் ஒன்று திருவாலி. இங்கே இருப்பவர் லட்சுமி நரசிம்மர். அடுத்தது திருமங்கையாழ்வார் அவதரித்த திருக்குறையலூர். (உக்ர நரசிம்மர்) மூன்றாவதாக திருமங்கையாழ்வார் தினம் ஆயிரம் பேருக்கு ததி யாராதனம் செய்த மங்கைமடம் என்கின்ற ஊர் அங்கே இருக்கக்கூடியவர் வீர நரசிம்மர். திருநகரியில் இரண்டு நரசிம்மர்கள் காட்சி தருகின்றார்கள். ஒன்று வடக்கு பிரகாரத்தின் மேலே இரண்யனை தம்முடைய தொடையில் போட்டு கிழிக்கும் உக்கிரமான கோலத்தோடு ஹிரண்ய நரசிம்மர் காட்சி தருகின்றார் மிகப்பெரிய வரப்பிரசாதி. ஒரு ஏணியின் மீது ஏறித்தான் அவரை தரிசிக்க வேண்டும்.

சுவாதி மற்றும் செவ்வாய்க்கிழமை அவரை தரிசிப்பது சாலச்சிறந்தது வேண்டிய வரங்களை எல்லாம் அள்ளி அள்ளித் தருவார். ஐந்தாவது நரசிம்மர் இதே ஆலயத்தின் பின் சுற்றில் தனி சந்நதியில் யோக நரசிம்மராக அமர்ந்த கோலத்தோடு காட்சி தருகின்றார். இவருக்கு சுவாதி முதலிய தினங்களில் திருமஞ்சனம் முதலிய விசேஷ உபச்சாரங்கள் நடக்கும்.இந்தப் பகுதி ஒரு காலத்தில் சோழநாட்டுக்கு அடங்கிய ஒரு சிற்றரசாக இருந்தது. இதற்கு பெயர் ஆலிநாடு என்று இதற்குப் பெயர். தல புராணத்தின் படியும் கருடபுராணத்தின் படியும் இந்தப் பகுதிக்கு பில்வாரண்யம் என்று பெயர். இன்றும் 1500 ஆண்டுகள் பழமையான வில்வ மரம் தல விருட்சமாக இருக்கிறது.

திருவாலி என்று ஏன் பெயர் வந்தது?

திருமால் அவதாரங்களை எடுத்தார். பக்தர்களைக் காப்பாற்றவும் பக்தர்களைத் தீங்கு செய்பவர்களை அழிக்கவும் அவருடைய அவதாரங்கள் இருந்ததாக அவரே கீதையில் கூறுகின்றார்.
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே இரண்யன் என்கின்ற அசுரன் இந்த உலகத்தை படாத பாடுபடுத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு வெகு நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்து, கடைசியில் பிரகலாதன் என்கிற தெய்வக் குழந்தை பிறந்தான். அவன் வயிற்றில் இருந்த பொழுதே நாரத முனிவரால் நாராயண மந்திரத்தின் பெருமையை அறிந்து, எப்பொழுதும் நாரணனே நம்மை காப்பாற்றுவான் என்கின்ற திடமான நம்பிக்கையோடு இருந்தான்.

இதைச் சற்றும் விரும்பாத அசுர ராஜாவாகிய இரண்யன் அந்தக் குழந்தையை படாத பாடுபடுத்தினான். பல்வேறு தண்டனைகளைக் கொடுத்தான். அப்பொழுதெல்லாம் பெருமாள் அந்தக் குழந்தையைக் காப்பாற்றினார். ஒரு கட்டத்தில் ஹிரண்யன் ஆட்டம் அதிகரிக்க, தேவர்கள் பெருமானிடம் முறையிட, பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யனை வதம் செய்தார். வதம் செய்த பிறகும் அவருடைய கோப மானது அடங்காமல் இருந்ததைக் கண்டு தேவர்களும் முனிவர்களும் மிகவும் பயந்தனர். அவர்கள் மகாலட்சுமியிடம் சென்று ‘‘நரசிம்ம பெருமாள் கோபம் அடங்காமல் இருந்தால், இந்த உலகம் மேலும் துன்பப்படும்.

அவருடைய கோபத்தை தீர்த்து அருள வேண்டும்’’ என்று வேண்ட, மகாலட்சுமி எம்பெருமானின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். தேவியை எம்பெருமான் அன்போடு ஆலிங்கனம் செய்தார்.அப்படி ஆலிங்கனம் செய்த கோலத்தோடு எழுந்தருளி இருப்பதால் “திருவாலி” என்று பெயர் வந்தது.திருமங்கையாழ்வார் காலத்திற்கு முன்னாலே அவதரித்த குலசேகர ஆழ்வார் இங்குள்ள எம்பெருமானை “ஆலிநகர்க் கதிபதியே !அயோத்தி எம் அரசே! ராகவனே! தாலேலோ” என்று மங்களாசாசனம் செய்ததிலிருந்து இத் தலம் எத்தனை பழமையான திருத்தலம் என்பது விளங்கும்.

நீலனை ஆழ்வாராக மாற்றிய பெருமாள்

இந்த ஆலி நாட்டை தலைநகராகக் கொண்டுதான் திருமங்கையாழ்வார் நீலன் என்ற பெயரில் ஆண்டு வந்தார். எனவே திருமங்கை ஆழ்வாருக்கும் ஆலி நாடன் என்ற பெயரே அமைந்தது.
அவரை ஆழ்வாராக மாற்றியதில் மிகப்பெரிய பங்கு அவருடைய துணைவியாகிய குமுதவல்லி நாச்சியாருக்கு உண்டு. அவர்தான் இவருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ளச் சொல்லி தினசரி ஆயிரம் அடியார்களுக்கு அமுது படைக்கச் சொல்லி ஆழ்வாராக மாற்றி அருளினார். எனவே திருமங்கையாழ்வாருக்கு திருமங்கை மன்னன் என்ற பெயர் வந்தது. ஒரு பாசுரத்தில் தம்முடைய பெயர்களை எல்லாம் அவர் அடுக்கிச் சொல்லுகின்றார்.

செங்கமலத் தயன்
அனைய மறையோர்
காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலிநாடன்
அருள்மாரி யரட்டமுக்கி யடையார்சீயம்
கொங்குமலர் குழலியர் கோன் மங்கை வேந்தன்
கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முத்தமிழ் மாலை பத்தும் வல்லார்
தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே

1500 வருடங்களுக்கு முன்னால் திருமங்கை ஆழ்வார் இங்கே வாழ்ந்ததற்கு சான்றாக அவர் அவதரித்த திருக்குறையலூர், அவர் வழிபட்ட பஞ்ச நரசிம்ம பெருமாள், அவரை திருத்திப் பணி கொண்ட கல்யாண ரங்க நாதசுவாமி, நமக்கு காட்சி தந்து கொண்டிருக்கிறார்கள். ஆழ்வார் சந்நதி திருநகரியில் தனிக் கொடிமரம் கொண்டு அமைந்திருக்கிறது. குமுதவல்லி நாச்சியாரோடு தோளில் சாத்திய வேலோடு கம்பீரமாகக் காட்சி தருகின்றார். இன்னும் ஒரு சான்று. அவர் வழிபட்ட திருவாராதனப் பெருமாளாகிய சிந்தனைக்கு இனியான் என்கின்ற பெருமாளை இப்பொழுதும் நாம் திருநகரி திருமங்கையாழ்வார் சந்நதியில் காணலாம்.

ஆழ்வாரை மடைமாற்றம் செய்ததில் திருவாலி திருத்தலத்தின் மகாலட்சுமி தாயாருக்கும் ஒரு பங்கு உண்டு திருமங்கை ஆழ்வார் சாதாரண ராஜாவாக போர் புரிந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, ‘‘இவர் இப்படி எத்தனை காலம் இருப்பார்? இவரைத் திருத்திப் பணி கொள்ள வேண்டாமா?’’ என்று பெருமாளை நச்சரித்துக் கொண்டிருந்தாள் பிராட்டி. தன்னுடைய சேதனனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இருப்பவள் அல்லவா!

அதனால் புருஷ கார பூதையான அவள் எம்பெருமானை விடாது திருமங்கை மன்னனை ஆழ்வாராக்க வேண்டும் என்று சொன்னபொழுது, ‘‘அப்படியானால் நீ திருவாலி சென்று அங்கே தவம் செய்து கொண்டிருக்கும் பூரண மகரிஷியின் புத்திரியாக அவதாரம் செய். நான் வந்து உன்னை திருமணம் செய்து கொள்வேன். அந்தத் திருமண கோலத்தில் நீலனாகிய திருமங்கை மன்னனை மடைமாற்றம் செய்து ஆழ்வாராக்கலாம்’’ என்று யோசனை சொல்ல, அப்படியே மஹாலட்சுமித் தாயார் பூர்ண மகரிஷிக்கு மகளாக அவதரித்தாள். பூரண மகரிஷி தவம் புரிந்த தலம் என்பதால்
பூரணபுரி என்றும் பெயர் உண்டு.

பெரிய திருமொழி பிறந்தது

பிராட்டியை மணம் செய்து கொள்ள இத் தலத்துக்கு ஆலி மணவாளனாக பெருமாள் எழுந்தருளுகின்றார் திருமணம் புரிந்து கொண்டு, நிறைய நகை, பட்டு என அணிந்து கொண்டு திருவாலியில் இருந்து திருநகரிக்கு செல்லுகின்றார்கள் .செல்லும் வழியே இருட்டாகி விடுகிறது. வேதராஜ புரம் என்கின்ற இடத்திலே தங்குகின்றார்கள்.அப்பொழுது வசதி உள்ளவர்கள் பொருள்களை கொள்ளையடித்தாவது ததி யாராதனத்தை இடைவிடாது நடத்த வேண்டும் என்று இருந்த திருமங்கையாழ்வார், இப்படி ஒரு தம்பதியர் நிறைய நகைகளோடு வந்து வேத ராஜபுரத்தில் தங்கி இருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டவுடன் தன்னுடைய ஆடல் மா என்கிற குதிரையில் ஏறி, உதவியாளர்களுடன் சென்று, திருமண தம்பதியை மடக்குகின்றார். நகையை எல்லாம் கழட்டித் தரும்படி வற்புறுத்த அவர்களும் நகைகளை கழட்டித் தருகிறார்கள்.

அவற்றையெல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டித் தூக்கும் பொழுது பெருமாள் திருவடியில் உள்ள மெட்டி கண்ணிலே படுகின்றது. ‘‘ஓ! இது ஒரு நகை விட்டு போய்விட்டதே. இதை ஏன் விட வேண்டும்?’’ என்று அதையும் தம்முடைய வலிமையான கரங்களால் இழுக்க, அந்த மெட்டி வரவில்லை. உடனே குனிந்து வாயை வைத்து பல்லால் இழுக்கின்றார். அப்பொழுது பெருமாள் அவருடைய தலையை தம்முடைய திருக்கரத்தால் வருடி ‘‘நம் கலியனோ’’ என்று ஆதுரத்துடன் கேட்கின்றார். அதற்குப் பிறகு அவர் மூட்டையைக் கட்டிக்கொண்டு நகையை தூக்கும் பொழுது தூக்க முடியவில்லை. எவ்வளவோ பெரிய பொருட்களை எல்லாம் தூக்கிய திருமங்கை ஆழ்வார் ஒரு சிறிய நகை மூட்டையைத் தூக்க முடியவில்லை.

இந்தத் திருமணத் தம்பதியர் ஏதோ மந்திரம் போட்டு இருக்கிறார்கள் அதனால் தான் மூட்டையைத் தூக்க முடியவில்லை என்று நினைத்து, தம்முடைய வாளை உருவி, ‘‘என்ன மந்திரம் போட்டாய்? சொல்’’ என்று பெருமாளையும் பிராட்டியையும் மிரட்ட பெருமாள், ‘‘நீ கேட்கும் படி கேட்டால் நான் சொல்லுகின்றேன்’’ என்று சொல்ல, ‘‘எப்படிக் கேட்க வேண்டும்?” என்று திருமங்கையாழ்வார் பதில் கேட்க, ‘‘உன்னுடைய வலது செவியை என்னிடத்தில் கொண்டுவா, இந்த மந்திரத்தைச் சொல்லுகிறேன் ‘‘என்று சொல்ல, அப்படியே தமது வலது செவியை பெருமாளின் திருவாய் பக்கம் திருப்ப, பெருமாள் அவருக்கு இனிமையான அஷ்டாச்சர மந்திரத்தின் பெருமையை சொல்ல, மின்சாரம் பாய்ந்தது போல் ஆழ்வார் அந்த நொடியிலே மடைமாற்றம் பெற்று, உடல் உருகி, உள்ளம் நைந்து, அற்புதமான தமிழ் மொழியால், எம்பெருமானுடைய மங்களமான குணங்களைப் பாட ஆரம்பிக்கின்றார் அதுதான் பெரிய திருமொழி.

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துய ரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடி யிளையவர் தம்மோ
டவர் தரும் கலவியே கருதி.
ஓடினே னோடி யுய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதந் தெரிந்து
நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன்
நாராய ணாவெனும் நாமம்,
என்று ஆரம்பித்து அடுக்கடுக்காக
பாசுரங்களைப் பாடுகின்றார்.

இன்றைக்கும் இந்த திருமணமானது பங்குனி பூரம் அன்று திருவாலிக்கு அருகே வேதராஜபுரம் என்கிற ஊரில் (அந்த ஊருக்கு இன்னொரு பெயரும் உண்டு. திருமணங்கொல்லை) நடைபெறுகிறது.நள்ளிரவில் திருமங்கை ஆழ்வார் ஆடல்மா என்கிற குதிரையில் வந்து திருமண தம்பதிகளிடம் நகையைப் பறிக்கும் வேடு பறி உற்சவம் இன்றைக்கும் பங்குனி பூரம் ஒட்டி நடைபெறுகிறது.எம்பெருமான் முதல் முறையாக திருமந்திர உபதேசம் செய்தது வடக்கே உள்ள பத்திரிகாசிரமம்.

அதற்கு அடுத்தபடியாக இந்தத் தலத்தில் தான் திருமந்திர உபதேசம் செய்வதால், இந்தத் தலம் பத்திரிகாசிரமத்திற்கு சமமான திருத்தலமாகக் கருதப்படுகின்றது.சோழ நாட்டின் குறுநில மன்னனாக இருந்த நீலன் என்கிற வீரனை திருமங்கையாழ்வாராக மாற்றிய திருத்தலம் திருவாலி. அந்த திருவாலி திருத்தலத்தை ஒருமுறை சென்று சேவிப்போம்.

தூயானை தூய மறையானை தென் ஆலி
மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட
வாயானை மாலை-வணங்கி அவன் பெருமை
பேசாதார் பேச்சு என்றும் பேச்சு அல்ல கேட்டாமே.
– பெரிய திருமொழி.

1. இந்தத் தலம் சீர்காழி திருவெண்காடு பேருந்து சாலையில் உள்ளது. சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே ஆறு மைல் தொலைவில் உள்ளது. மயிலாடு
துறையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

3.மூலவர்: அழகிய சிங்கர்
(லட்சுமி நரசிம்மன்)
உற்சவர்: திருவாலி நகராளன்
தாயார்: பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி)
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: லாட்சணி புஷ்கரிணி
விமானம்: அஷ்டாட்சர விமானம்

4. திருவிழாக்கள்

வைகாசி சுவாதி திருவிழா (10 நாள்), ஆவணி பவித்ரோற்சவம், வைகுண்ட ஏகாதசி, தை அமாவாசைக்கு மறுநாள் 12 கருட சேவை, பங்குனி உத்திரம், மாத சுவாதி, பிரதோஷ தினங்களில் சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும். திருமங்கைமன்னன் பெருமாள் வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழாவும் பங்குனி உத்திர திருவிழாவின்போது நடை பெறுகிறது.

5. இதன் குடமுழுக்கு வரும் ஐப்பசி மாதம் 4ம் தேதி (21.10.2024)காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் நடைபெறுகிறது.

முனைவர் ராம்

The post அலைமகளை ஆலிங்கனம் செய்த திருவாலி பெருமாள் appeared first on Dinakaran.

Read Entire Article