கர்நாடக மாநிலம், மைசூருவில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டது பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில். 27 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் 1600பேர் பயணித்தனர். பெங்களூரு, காட்பாடி, பெரம்பூர், வியாசர்படி வழியாக ஆந்திரா நோக்கி இந்த ரயில் சென்றது. பொன்னேரி ரயில்நிலையம் அருகே வந்தபோது, நேர் பகுதியில் செல்வதற்கு இந்த ரயிலுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூரை அடுத்த கவரப்பேட்டை ரயில்நிலையம் நோக்கி 120கிலோ மீட்டர் வேகத்தில் முதலாவது வழித்தடத்தில் பாக்மதி எக்ஸ்பிரஸ் வந்துள்ளது.
கவரப்பேட்டைக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவருக்கு லூப்லைன் என்று கூறப்படும் இரண்டாவது தடத்தில் செல்வதற்கு சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிரைவர் லூப்லைனில் ரயிலை இயக்கியுள்ளார். அதே நேரத்தில் அதே தடத்தில் 75பெட்டிகளுடன் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்பகுதியில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியுள்ளது. இதில், ரயிலின் 13பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. 3பெட்டிகள் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில் 13பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.
இந்தியாவில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரயில்வே துறையில் சமீபகாலமாக விபத்துகள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த விபத்துகள் என்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. 2010ம் ஆண்டு மே மாதம், மேற்கு வங்கத்தில் சரக்கு ரயிலும், விரைவு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 148 பயணிகள் உயிரிழந்தனர். 2023ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில் விபத்தில் சிக்கியது. இதில் 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதில் 296 பேர் பலியாகினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நடப்பாண்டு (2024) ஜூன் மாதம் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டம் நியூஜல்பைகுரி அருகே சரக்கு ரயிலும், விரைவு ரயிலும் மோதிக் கொண்டதில் 15பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதன்படி கடந்த 13ஆண்டுகளில் மட்டும் ரயில் விபத்தில் 459பேர் பலியாகி உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உடல் உறுப்புகளை இழந்து நிர்க்கதியாக நிற்கின்றனர். ஒன்றிய ரயில்வே துறையில் 6நாட்களுக்கு ஒரு சாதாரண ரயில் விபத்து என்பது தொடர்கதையாகி வருகிறது. அவ்வப்போது கோர விபத்துகளும் அரங்கேறி வருகிறது.
கடந்த காலங்களில் இது போன்ற விபத்துகள் நடந்தால் அந்த துறை அமைச்சர் அதற்குரிய பொறுப்பை ஏற்பார். அடுத்து இதுபோன்ற அபாயங்கள் நிகழாமல் இருப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். ஆனால், தற்போதைய ஒன்றிய ரயில்வே துறை அலட்சியத்தின் உச்சத்தில் உள்ளது என்பதற்கு தொடரும் ரயில் விபத்துகள் பெரும் சாட்சியாக நிற்கிறது. ஒன்றிய அரசின் மெத்தனத்திற்கு அனைத்து அரசியல்கட்சி தலைவர்களும் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ‘‘பல விபத்துகளில் பல உயிர்கள் பலியாகி இருந்தாலும் ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை. இந்த அரசு விழித்துக் கொள்ளும் முன்பு எத்தனை குடும்பங்கள் அழிக்கப்படுமோ?’’ என்று கேட்டிருப்பது ஒட்டு மொத்த மக்களின் கேள்வி என்றால் அது மிகையல்ல.
The post அலட்சியத்தின் உச்சம் appeared first on Dinakaran.