புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 52வது புதிய நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வரும் நவம்பர் 23ம் தேதி வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவி வகிப்பார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி பதவியேற்ற சஞ்சீவ் கண்ணா பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலின் படி உச்ச நீதிமன்றத்தில் 52வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் எனும் பி.ஆர்.கவாய் நேற்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கடந்த 1960ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பிறந்தவர். கடந்த 1985ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். கடந்த 2003ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து 2005ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2019ம் ஆண்டு மே 23ம் தேதி வரை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த அவர், 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள பி.ஆர்.கவாய் இந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி ஓய்வுபெற உள்ளார். அதாவது சுமார் ஆறு மாத காலம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இவர் பதவிவகிக்க உள்ளார். பி.ஆர்.கவாய் நாட்டின் 2வது தலித் தலைமை நீதிபதி ஆவார். இதற்கு முன் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் 2007ல் நாட்டின் முதல் தலித் தலைமை நீதிபதியாக இருந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக நீதிபதியாக பணியாற்றிய பி.ஆர்.கவாய் பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை எழுதி உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வந்த நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஆறு பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்திருந்தார்.
அம்பேத்கர் சிலைக்கு மரியாதை
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய், அங்கு வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கர் உள்ளிட்டோரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு கூடியிருந்த வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் உட்பட அனைவரும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.
The post உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்: 6 மாதங்கள் பதவி வகிப்பார் appeared first on Dinakaran.