அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

1 month ago 5

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2021-22 முதல் 2024-25 வரையிலான நிதியாண்டுகளில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் செயலாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்குதல், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சொந்தமான குளங்களை தூர்வாரி மேம்படுத்துதல், குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான புதிய அலுவலகக் கட்டிடங்கள், உயர்மட்ட பாலங்கள், சாலைகள் மேம்பாடு, மழைநீர் வடிகால்கள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகள் அனைத்தும், நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப்பட்டு பின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், அதன் பின்னர், அத்திட்ட பணிகளின் செயலாக்கங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், துணை மேயர் மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் தா.கார்த்திகேயன், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ்.விஜயகுமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கே.விவேகானந்தன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article