
ஜெய்ப்பூர்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் பல இளம் வீரர்கள் அறிமுகமாகி சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் அணியில் அறிமுகமாகிய 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளார். ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் அறிமுகம் ஆன வீரர் என்ற சாதனையை படைத்தார். லக்னோவுக்கு எதிரான 36-வது லீக் ஆட்டத்தில் ஐ.பி.எல். தொடரில் அறிமுகம் ஆன வைபவ் சூர்யவன்ஷி சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து கெரியரை அதிரடியாக தொடங்கினார்.
அதன்பின் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய அவர் 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதனால் டி20 கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதமடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். மேலும் ஐ.பி.எல். தொடரில் அதிவேக சதமடித்த இந்திய வீரர், குறைந்த வயதில் ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர் என ஏராளமான சாதனைகள் படைத்தார்.
இதனிடையே வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் ஆன முதல் போட்டியில் ஆட்டமிழந்து செல்லும்போது கண் கலங்கியபடி செல்லும் வீடியோ வைரலானது. இதனால் அனைவரும் அவர் அழுததாக நினைத்தனர்.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சூர்யவன்ஷி தான் அழவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நான் எப்போது அழுதேன்? அங்கிருந்த மின் விளக்குகள் மற்றும் எல்இடி திரைகளைப் பார்த்தேன். அதிலிருந்து வந்த பிரகாசமான வெளிச்சம் என்னை அடிக்கடி சிமிட்ட வைத்தது. அதனால் கண்களை தேய்த்துக்கொண்டே வெளியேறினேன். ஆனால் நான் அழுகிறேன் என்று மக்கள் நினைத்தார்கள். உண்மையில் நான் அழவில்லை" என்று கூறினார்.