சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.சேகர்பாபு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (14.05.2025) சென்னை, கொளத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொளத்தூரில் மூத்த குடிமக்கள் இல்லம் அமையவுள்ள இடம், கீழ்ப்பாக்கம், அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கொளத்தூர் பூம்புகார் நகரில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கல்லூரி கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்துதல், திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளோடு கல்வி சார்ந்த அறப்பணிகளையும் சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தற்போது 1,035 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையில் கடந்தாண்டு ரூ.1.78 கோடி செலவில் பள்ளி கட்டிடங்கள் மராமத்து செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. மேலும், இப்பள்ளிக்கு கூடுதலாக ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் 32 வகுப்பறைகள், ஆசிரியர்கள் ஓய்வறைகள், 5 ஆய்வங்கங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன.
மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இக்கல்லூரிக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு கடந்த 23.12.2024 அன்று அடிக்கல் நாட்டினார்கள். வரும் கல்வியாண்டில் கல்லூரி வகுப்புகள் புதிய கட்டடத்தில் நடைபெறும் வகையில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (14.05.2025) திருக்கோயில்கள் சார்பில் கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் இல்லம், பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கல்லூரி புதிய கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி. என். ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சி. ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் ஜ.முல்லை, பெ.க.கவெனிதா, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் சரிதா மகேஷ் குமார், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மண்டல அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.