
சென்னை,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலை மக்கள் வழிபடத் திறக்காவிட்டால் நாம் தமிழர் கட்சி ஆலய நுழைவு போராட்டத்தை முன்னெடுக்கும் என்று நாங்கள் அறிவித்த பிறகு, இன்னும் ஒரு வாரத்தில் கோவில் திறக்கப்படும் என அறிவித்துள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள், கோவியில் திறக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டு, நாம் தமிழர் கட்சி அரசியல் செய்வதாகப் போகிறபோக்கில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசு கோவிலைத் திறக்கவிருப்பது முன்கூட்டியே எங்களுக்குத் தெரியுமென்றால், நாம் தமிழர் கட்சி போராட்டத்தை அறிவிக்கும்வரை மேல்பாதி கோவில் விரைவில் திறக்கப்படும் என்பதை ஏன் அரசு அறிவிக்கவில்லை? கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில் மேல்பாதி திரவுபதி அம்மன் கோயில் தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை மக்கள் வழிபடத் திறக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கூறியது ஏன்?
இரண்டில் எது உண்மை? காலை 6 -7 மணி என்பது என்ன நேரம்? தீண்டாமை நேரமா? காலை ஒரு மணிநேரம் மட்டும் திறப்பது என்றால் அது வழிபாட்டுத் தலமா? அல்லது காலை உணவுக்கான உணவகமா? எல்லாம் முன்னமே தெரிந்து கொண்டு அறிவிக்கிறேன் என்றால் எங்கள் வீட்டு வாசலில் அழைப்பாணை ஒட்டுவது எங்களுக்கு முன்கூட்டியே தெரியாமல் போனது எப்படி? என்ற கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பதில் கூறுவாரா? இப்படிச் சிறிதும் அறமற்ற துறையாக தமிழ்நாடு அறநிலையத்துறை ஆனது ஏன்?
மேல்பாதி கோவிலைப் போன்றே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பலநூறு கோவில்கள் திறக்கப்படாமலும், தேரோட்டம், திருவிழாக்கள் நடத்தப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே? உண்மையிலேயே திமுக அரசிற்கு அக்கறை இருந்திருந்தால் மக்கள் வழிபடுவதற்காக அவற்றையெல்லாம் திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இதிலிருந்தே கோவிலை வைத்து அரசியல் செய்வது திமுகவா? அல்லது நாம் தமிழர் கட்சியா? என்பதை மக்கள் தெளிவாக அறிந்துகொள்வார்கள்.
கோவில் நிலமெனக்கூறி ஏழை மக்கள் குடியிருக்கும் வீடுகளைப் பறிக்கும் அறநிலையத்துறை, பெரும் செல்வந்தர்கள் வசமுள்ள பல்லாயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை இதுவரை மீட்காதது ஏன்? கோயில் பணம் பல்லாயிரம் கோடிகள் கொள்ளைபோவதைத் தடுக்காது, கோ பூஜை நடத்துவதும், பள்ளிக்கூடம் நடத்தவே பணம் இல்லாதபோது பசு மடம் கட்டுவதும்தான் திராவிட மாடலா?
தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று ஐகோர்டு உத்தரவிட்ட பிறகும் தமிழ்நாடு அரசு தடை விதிப்பது ஏன்? தமிழில் குடமுழுக்குக்கோரி நாம் தமிழர் கட்சியினர் போராடினால் காவல்துறை மூலம் தடுத்து, தாக்குவது ஏன்? தமிழில் குடமுழுக்கு நடத்த போதிய அளவில் ஓதுவார்கள் இல்லையென்று தமிழ்நாடு அறநிலையத்துறை கோர்ட்டில் தெரிவிப்பதற்கு வெட்கமாக இல்லையா? தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிப்புப் பலகை மட்டும் வைத்துவிட்டு பல நூறு கோவில்களில் அது நடைமுறையில் இல்லாமல் இருப்பது தான் உரிமையைப் பெற்றுக் கொடுத்த முறையா? இதுதான் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள தமிழ் வளர்ச்சியா?
கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கும், பத்மநாபசுவாமி கோவிலுக்கும், கர்நாடகாவில் உள்ள தாய் மூகாம்பிகை - மைசூர் சாமுண்டீஸ்வரி - மல்லிகா அர்ஜுனா கோவில்களுக்கும், ஆந்திராவில் உள்ள திருப்பதி – காளகஸ்தி கோவில்களுக்கும் என பிற மாநில கோவில்களுக்கு பல்லாயிரம் தமிழர்கள் வழிபடச்செல்லும் நிலையில், அங்கெல்லாம் தமிழில் அறிவிப்புப்பலகை ஏதும் வைக்கப்படாதபோது, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அறநிலையத்துறை சார்பாக தெலுங்கில் அறிவிப்புப் பலகை வைத்திருப்பதும் ஏன்? யாரை மகிழ்விப்பதற்காக இந்த அறிவிப்பு? இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் இருமொழி கொள்கையா?
தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூட வாசல்களிலும், கோவில்கள் அருகிலும்தான் அதிகளவில் போதைப்பொருட்கள் விற்கப்படுகிறது என்பது மாண்புமிகு அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? கோவில்கள் அருகிலேயே தமிழ்நாடு அரசு நடத்தும் மதுக்கடைகளை அகற்ற அறநிலையத்துறை இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முயன்ற திமுக அரசு, மக்களின் கடும் எதிர்ப்புக்கும், தொடர் போராட்டத்திற்கும் பிறகு அத்திட்டத்தைக் கைவிடப்போவதாக எங்களுக்கு தெரியவந்திருக்கிறது. அச்செய்தி உண்மைக்கு மாறாக இருக்கும்பட்சத்தில் மீண்டும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்துக்கொள்கிறேன்.
"கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவியில் கொடியவர்களின் கூடாரமாய் ஆகிவிடக்கூடாது என்பதற்காக..!" இந்த உரையாடலை எங்கோ கேட்டதுபோல் உள்ளதா? உங்கள் 'பராசக்தி' படத்தின் வசனம்தான்! கோவில்களை அறநிலையத்துறை நிர்வகிக்கக் கூடாதென்பதல்ல எங்கள் கொள்கை; கோவியில்களைக் கொள்ளையடிக்கும் கூடாரமாக அறநிலையத்துறை ஆகிவிடக்கூடாது என்பதே எங்கள் கொள்கை!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.