
புதுடெல்லி:
தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் வகையில் 2006-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு சட்டம் இயற்றியது. அதன் தொடர்ச்சியாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெறும் வகையில் பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்டோர் படித்து அர்ச்சகராக தீட்சை பெற்றுள்ளனர்.
இதற்கிடையே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அரசின் முடிவை எதிர்த்து அனைத்திந்திய ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் வழக்குத் தொடர்ந்து, தடை ஆணையை பெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
கடந்த 2015ஆம் சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அதில், தமிழக கோவில்களில் ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டும் என்றும் தெரிவித்தது.
ஆகம விதிகளுக்கு முரணாக, கோவில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களை நியமிக்க தடை விதிக்கக்கோரி அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உட்பட சில அமைப்புகள், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. கோவில்களில் அர்ச்சகர்கள் பணி நியமனம் தொடர்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இவ்வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது ராமேஸ்வரம் கோவிலில், போதிய அளவில் குருக்கள் இல்லாமல் பூஜை நடைபெறுவதாகவும், அர்ச்சகர் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப உத்தரவிடவேண்டும் என்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
2500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதால் அர்ச்சகர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த வாதங்களை கேட்டறிந்த சுப்ரீம் கோர்ட்டு, ராமேஸ்வரம் கோவிலில் அர்ச்சகர் மற்றும் மணியம் உள்ளிட்டோரை நியமிக்கும்படி உத்தரவு பிறப்பித்தது.
மேலும், தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்கள், ஆகம விதிகளை பின்பற்றாத கோவில்களை 3 மாதத்தில் அடையாளம் காணும்படி தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்க தலைவர் அரங்கநாதன் சார்பில், இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் கூறியுள்ளதாவது:
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையை, 2006ல் தமிழக அரசு பிறப்பித்தது. அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சி வாயிலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு, தற்போது வரை முறையான பணி நியமனம் நடைபெறவில்லை. ஏற்கனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால், தற்போது வரை அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற நுாற்றுக்கணக்கானோர் பணி அமர்த்தப்படாமல் உள்ளனர்.
இதனால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடித்து, உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கில் எங்கள் தரப்பின் இந்த புதிய இடையீட்டு மனுவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.