தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார் கவர்னர் - அமைச்சர் கோவி. செழியன் குற்றச்சாட்டு

2 hours ago 2

சென்னை,

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி - லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகன்னாதனுக்கு பிரிவு உபசார விழாவினை தமிழ்நாடு கவர்னர் - அதுவும் கவர்னர் மாளிகையிலேயே நடத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்கலைக்கழகங்கள் தோறும் மதவாத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கவர்னர், ஊழல் வழக்கில் உள்ளவரையும்- அதிலும் குறிப்பாக பினாமி கம்பெனியை உருவாக்கி ஊழல் புகாரில் சிக்கியுள்ளவரை எந்த முகத்தை வைத்துக் கொண்டு கவர்னர் மாளிகையில் வரவேற்றார்? முறைகேட்டுப் புகாரில் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய விசாரணைக்கு ஏறி இறங்கிக் கொண்டிருப்பவர். துணை வேந்தராக இருக்கும் போதே சாதிப் பெயரைச் சொல்லி ஒருவரைத் திட்டியதால் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழான வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கைது செய்ய நேரிடும் என்று ஐகோர்ட்டாலேயே எச்சரிக்கைப்படவர். இவருக்கு பதவிக்காலம் முடிந்த பின்னரும் பணி நீட்டிப்பு வழங்கியதோடு - இப்படிப்பட்ட துணை வேந்தர் ஒருவருக்கு ராஜ்பவனில் பிரிவு உபசார விழாவினையும் நடத்தியதன் மூலம் "வேந்தர்" என்ற பொறுப்பில் இருப்பதற்கான தகுதியை கவர்னரே இழந்து விட்டார் என்றுதான் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

திமுக ஆட்சிக்கு எதிராக- தனது மதவாத கருத்துக்களை பரப்ப பாடுபட்ட துணை வேந்தருக்கு பாராட்டு விழா நடத்தியுள்ள கவர்னர், வேந்தர் பதவிக்குரிய கண்ணியத்தை தவறவிட்டுள்ளதோடு- மற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு எல்லாம் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்.

உயர்கல்வியின் மாண்பை சீர்குலைத்துள்ளார். ஊழல்வாதிக்கு கவர்னர் நடத்திய விழா பெருத்த அவமானத்திற்குரியது மட்டுமின்றி- பல்கலைக்கழக வரலாற்றில் கவர்னர் தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article