அருமனையில் பரபரப்பு; நெடுங்குளத்தின் கரையோரத்தில் மண் சரியும் அபாயம்: குடியிருப்பு வாசிகள் வெளியேற அறிவுறுத்தல்

1 day ago 5


அருமனை: அருமனை அருகே பரந்து விரிந்த நெடுங்குளம் உள்ளது. இந்த குளத்தில் நீர் தேங்கும்போது அப்பகுதி மக்கள் குளித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நெடுங்குளத்தை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நெடுங்குளத்தை தூர்வாரும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையே குளத்தில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி தினந்தோறும் ஏராளமான லாரிகள் மூலம் நெடுங்குளத்தில் வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சில லாரிகள் குளத்தில் அளவுக்கு அதிகமாகவும், ஆழமாக தோண்டி மண் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததால் குளத்தின் கரையோர பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குளத்தின் கரையில் உள்ள அடுக்குமாடி வீடுகள் நிலச்சரிவில் சிக்கி இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் மண் உறுதிதன்மையற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நெடுங்குளத்தின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று விளவங்கோடு தாசில்தார் மற்றும் குலசேகரம் தீயணைப்பு படை வீரர்கள் நெடுங்குளத்துக்கு சென்று மண் சரியும் அபாயம் உள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அதிகாரிகளிடம் பொதுப்பணித்துறையினர் வந்து குளத்தில் மண் உறுதிதன்மை குறித்து ஆராய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே முன்னெச்சரிக்கையாக நெடுங்குளத்துக்கு அருகே அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க குளத்தின் அருகே நீர்நிலை பகுதியில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கியது குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மண் சரிவால் வீடுகளுக்கு ஆபத்து வரும் என தெரிந்த பின்னரும் நீர்நிலைகளில் வீடு கட்ட அனுமதி அளித்தவர்களிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

The post அருமனையில் பரபரப்பு; நெடுங்குளத்தின் கரையோரத்தில் மண் சரியும் அபாயம்: குடியிருப்பு வாசிகள் வெளியேற அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article