கோவை: கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி அமைப்பு கூண்டோடு கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் ராமசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; நா.த.க. கட்சியின் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஒட்டு மொத்தமாக விலகுகிறோம். கோவை வடக்கு மாவட்ட நா.த.க. நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகுகின்றனர். சீமானின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு கட்சிக்கு வந்தோம்; ஆனால் அவரது செயல்பாடுகள் தற்போது முரண்பாடாக உள்ளது.
நா.த.க.வின் தலைவர் சீமான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சியின் கொள்கைக்கு முரணாக பேசி வருகிறார். அவர் தமிழ்த் தேசியம் பேசுவது, அருந்ததியர்களை வந்தேறிகள் என்று சொல்வது போன்றவையெல்லாம் ஏற்கத்தக்கவை இல்லை. சீமானுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள் கட்சியில் இருந்து விலகிவிட்டனர். இதனால் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளின் குறைகளை பிரச்னைகளை கேட்கவும், சரி செய்யவும் கட்சியில் ஆள் இல்லை.
களத்தில் இருப்பவர்களின் பிரச்னைகள் சீமானை சென்றடைவதில்லை. வேலைக்கான அங்கீகாரம் எங்களுக்கு கிடைப்பதில்லை. பெண்களுக்கு சம உரிமை கொடுத்தாலும் பெண் நிர்வாகிகளின் கருத்துகளை அவர் ஏற்பதில்லை. எனவே அதிருப்தி காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்து இருக்கிறோம். எங்களின் விலகலை முறைப்படி மண்டல நிர்வாகிகளுக்கு தெரிவித்துவிட்டோம் என்றனர்.
The post அருந்ததியினர் குறித்த சீமான் பேச்சுக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு: கோவை வடக்கு நா.த.க. நிர்வாகிகள் கூண்டோடு விலகல்! appeared first on Dinakaran.