“அருட்கொடையா..! எந்த அருட்கொடை?”

1 week ago 3

அந்த வசனம் நபித் தோழர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களுடைய வாழ்நிலை அன்று அப்படி இருந்தது.“அந்நாளில் (மறுமை நாளில்) இந்த அருட்கொடைகளைப் பற்றி கட்டாயம் நீங்கள் வினவப்படத்தான் போகிறீர்கள்” (102:8) என்கிற திருவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்களுக்கு வியப்பு தாளவில்லை.ஏனெனில், இந்தத் திருவசனம் அருளப்பட்டபோது அவர்களுக்கு அடுத்த வேளை உணவு அல்ல, இந்த வேளைக்கான உணவு கிடைப்பதே பெரும் சிரமமாக இருந்தது. இடுப்பில் கட்டியிருக்கும் துணியைத் தவிர ஒரு மாற்றுடை இல்லை.இந்தச் சூழலில், “அருட்கொடைகள் பற்றி வினவப்படுவீர்கள் எனில், வினவுவதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது?” என்று தோழர்கள் யோசித்தனர்.
இறைத் தூதரிடம் கேட்கவும் செய்தனர்.

“இறைத்தூதர் அவர்களே… எங்களிடம் இருப்பது தண்ணீரும் இரண்டொரு பேரீச்சம் பழங்களும்தாம். இவற்றையா இறைவன் அருட்கொடை என்கிறான்? இவை குறித்தா மறுமையில் கேள்விக் கணக்கு?” என்று கேட்டனர்.அப்போது நபிகளார் அவர்கள் பனீ இஸ்ராயீல் எனும் 17ம் அத்தியாயத்திலிருந்து 36ஆம் வசனத்தை ஓதிக் காட்டினார்.“திண்ணமாகக் காது, கண், இதயம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் விசாரிக்கப்பட்டே தீரும்.”கண் ஓர் அருட்கொடை. காது ஓர் அருட்கொடை. இதயம் (இதில் சிந்தனை ஆற்றல், எண்ணம், மூளை அனைத்தும் உட்படும்) ஓர் அருட்கொடை. இவற்றை எல்லாம் எப்படிப் பயன்படுத்தினீர்கள் என்பது குறித்துத் திண்ணமாகக் கேள்வி உண்டு என்பது அந்த நபிமொழியின் விளக்கமாகும்.

கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் அவை யெல்லாம் நமது பார்வைப் புலனுக்கும் செவிப்புலனுக்கும் இதயத்திற்கும் ஈடாகுமா? நம் உடலில் இயங்கும் ஒவ்வோர் உறுப்பும் ஓர் அருட்கொடைதான். அதை யாரால் மறுக்க முடியும்?இந்த அருட்கொடைகளுக்கு நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தியே ஆகவேண்டும். நம்முடைய கண்களையும் காதுகளையும் இதயத்தையும், கைகளையும், கால்களையும் முறையான வழிகளில் பயன்படுத்துவதுதான் நன்றி செலுத்துவதற்கான ஒரே வழி.

– சிராஜுல் ஹஸன்.

இந்த வாரச் சிந்தனை

“இன்று (மறுமை நாளில்) அவர்களுடைய வாய்களுக்கு நாம் முத்திரை வைத்து விடுவோம். உலகில் அவர்கள் எவற்றைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள் என்று அவர்களின் கைகள் நம்மிடம் சொல்லும்; அவர்களின் கால்களும் சாட்சி பகரும்.” (குர்ஆன் 36:65)

The post “அருட்கொடையா..! எந்த அருட்கொடை?” appeared first on Dinakaran.

Read Entire Article