புதுடெல்லி,
அரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடந்த இந்த ஒரே கட்ட தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அரியானாவில் 2 முறை ஆட்சியில் நீடித்து வரும் பா.ஜ.க. 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளது. எனினும், இந்த தேர்தலில் வெற்றியை பெற காங்கிரசும் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளது. 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் சோர்வடைந்து விட்டனர். ஒரு மாற்றம் வேண்டும் என விரும்புகின்றனர் என்று கைத்தல் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் ஆதித்யா சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
இந்த தேர்தலில் அரியானாவில், தேர்தலுக்கு பின்பு வெளியான கருத்துக்கணிப்பு முடிவில் 60 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், பா.ஜ.க. ஹாட்ரிக் வெற்றியை பெறுவது முடியாமல் போகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, அரியானா, காஷ்மீரில் நாங்கள் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெறுவோம். பிரதமர் மோடிக்கும் கூட நாங்கள் ஜிலேபி அனுப்பி வைக்க இருக்கிறோம் என கிண்டலாக கூறியுள்ளார். இன்று நாள் முழுவதும் நாங்கள் லட்டு மற்றும் ஜிலேபி ஆகியவற்றை உண்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அரியானா, காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் காலையில் இருந்து லட்டு மற்றும் ஜிலேபி உள்ளிட்ட இனிப்புகளை வழங்க தொடங்கியுள்ளனர்.