அரியலூர், பிப். 1: அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பள்ளிக் கல்வித் துறை, யுனிசெப், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்கம் நிறுவனம் சார்பில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக இரண்டு நாள்களாக நடைபெற்று வந்த புத்தாக்கம் கண்டுப்பிடிப்பு பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் 46,189 மாணவர்கள் சமர்ப்பித்துள்ள அறிவியல் கண்டுப்பிடிப்புகள், இணைதளம் மூலம் மூன்று கட்டங்களாக மதிப்பீடு செய்யப்பட்டதில், அதில் அரியலூர் மாவட்டத்தில் 15 அணிகள் என 74 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாணவர்களின் கண்டுப்பிடிப்பினை முன்மாதிரி உருவாக்க பயிற்சி அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கியது.
பயிற்சியை மாவட்ட தொழில் மைய மேலாளர் லட்சுமி அம்மாள் தொடக்கி வைத்து பேசினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம் பங்கேற்று மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். மாவட்ட திட்ட மேலாளர் ராம்குமார், அறிவியல் கண்டுபிடிப்புகளில் தேர்வான 15 குழு அணிகளை சேர்ந்த 74 மாணவர்களுக்கு பயிற்சிஅளித்தார்.
வழிகாட்டியாளர்களாக பேராசிரியர்கள் சரவணன், ராமேஸ்வரி ஆகியோர் செயல்பட்டனர். நடுவர்களாக அருண்குமார், இளையராஜா, மகேந்திரவர்மன் ஆகியோர் மாணவர்களின் செயல் வடிவங்களுக்கு ஆலோசனை கூறி ஊக்குவித்தனர்.சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி கலந்து கொண்டு பேசினார். பயிற்சியின் நிறைவு நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட திட்ட மேலாளர் பிரவீன் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
The post அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி appeared first on Dinakaran.