அரியலூரில், செந்துறையில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

3 months ago 9

 

அரியலூர்,பிப்.15: அரியலூர், செந்துறை ஜாக்டோ – ஜியோ அமைப்பினர்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கான சரண்டர் விடுப்பு, உயர்க் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக் காலமாக வரன்முறைப்படுத்தும் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருணாநிதி, ஷேக்தாவூத் ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் விக்டோரியா வாழ்த்துரை வழங்கினார்.

தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலர் சிவராமன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் காந்தி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி வைரமுத்து, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆனந்தன், பதவி உயர்வுப் பெற்ற முதுநிலை ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் சுரேஷ், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதே போல், செந்துறையில், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் தலைமை வகித்தனர்.

The post அரியலூரில், செந்துறையில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article