புழல்: புழல் பொ ப்பிலிராஜா அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு, மாதவரம் போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல் மேற்பார்வையில் சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், சிறுவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் பைக்கில் சென்று பல இடங்களில் விபத்துகளை ஏற்படுத்துவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதனால், பைக்கில் சென்று விபத்துகளை ஏற்படுத்தும் மாணவர்கள், சிறுவர்களின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகிறது. இவற்றை தடுக்கும் வகையில், புழல் பொ ப்பிலி ராஜா அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்கனி தலைமையில் நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாதவரம் போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர்கள் அய்யனார், மகேந்திரன் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்துகொண்டு, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டக்கூடாது, தங்களது பெற்றோர் உறவினர்களுடன் ஹெல்மெட் அணிந்து பைக்கில் செல்ல வேண்டும், சிக்னல் சந்திப்புகளில் சாலை விதிமுறைகளை பின்பற்றி செல்ல வேண்டும் என பல்வேறு சாலை விதிமுறைகள் குறித்து, மாணவர்களிடையே விளக்க உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ – மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
* தினகரன் கல்வி மலர்
புழல், பொப்பிலி ராஜா அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் 200 மாணவ – மாணவிகளுக்கு, திங்கள்தோறும் தினகரன் கல்வி சிறப்பு மலரில் வெளியாகும் மாதிரி வினா – விடை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்கனி தலைமையில், சென்னை அரசு நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவக்குமார், பள்ளி மாணவ – மாணவிகளுக்கு தினகரன் கல்வி மலர் வழங்கி சிறப்பித்தார்.
The post அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.