சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பொய்யாவயல் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவர் சக்தி சோமையா (14 வயது). இன்று கணினி வகுப்பின்போது, ஆய்வகத்தில் கணினிக்கு மாணவர் மின் இணைப்பு கொடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாணவரை, ஆசிரியர்கள் மீட்டு காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவரின் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் என்று கூறி உறவினர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் உயிரிழந்த மாணவரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.