போர்நிறுத்த ஒப்பந்தம்; இஸ்ரேல் பணய கைதிகளின் 2-ம் கட்ட பெயர் பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்

5 hours ago 1

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் தொடக்கத்தில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டது.

ஓராண்டை கடந்து காசாவில் நடந்து வரும் மோதலில் பாலஸ்தீனியர்களில் 46,900 பேர் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 10 ஆயிரத்து 700 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைக்கான பணியில் ஈடுபட்டன. இதன்படி, காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு இஸ்ரேல் மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

இதனால், பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டு உள்ள இஸ்ரேல் மக்களை பாதுகாப்பாக விடுவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவர்களில் 3-ல் ஒரு பகுதியினர் உயிரிழந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது.

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த 19-ந்தேதி முதல் தொடங்கியது. இதனை தொடர்ந்து, பிடித்து வைத்துள்ள கைதிகளை பரஸ்பரம் விடுவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஆனது, 42 நாட்கள் நீடிக்கும். இதன்படி, காசாவில் இருந்து, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் பணய கைதிகளில் 33 பேர் விடுவிக்கப்பட உள்ளனர்.

முதல்கட்டத்தில் இஸ்ரேல் மக்கள் 3 பேர் கடந்த ஞாயிற்று கிழமை விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், 2-ம் கட்டத்தில் இஸ்ரேல் பணய கைதிகளில் கரீனா அரிவ், டேனியலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பேர் விடுவிக்கப்பட உள்ளனர் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது.

இவர்கள் 4 பேரும் இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகள் ஆவர். இதற்கு ஈடாக 200 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். இதன்படி, இன்று (சனிக்கிழமை) மதியம் பரஸ்பரம் இவர்களை விடுவிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

Read Entire Article