கோவை: “தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மும்மொழிக் கொள்கையை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விரிவுப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும், மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதியாகும்.” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும், மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதியாகும். அரசு பள்ளிகளை மேம்படுத்த 'பி.எம்.ஸ்ரீ' என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக, 'ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்' (எஸ்.எஸ்.ஏ) கீழ் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம். ஆனால், திட்டத்துக்கான நிதி மட்டும் வேண்டும் என திமுக அரசு கேட்கிறது.