வேலூர், மே 19: காட்பாடி அருகே மரத்தில் போலீஸ் ஜீப் மோதிய விபத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தயாளன். இவர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது, போலீஸ் ஜீப்பை விக்னேஷ் என்ற காவலர் ஓட்டி வந்தார். ஜீப்பில் இன்ஸ்பெக்டருடன், அவரது 15 வயது மகனும் இருந்தார். காட்பாடி அடுத்த கசம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதி முன்பக்கம் நொறுங்கியது. இதில் ஜீப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் தயாளன், போலீஸ்காரர் விக்னேஷ், இன்ஸ்பெக்டரின் மகன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை முடிந்து, அவர்கள் வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post காட்பாடி அருகே மரத்தில் போலீஸ் ஜீப் மோதி இன்ஸ்பெக்டர், 2 பேர் காயம் appeared first on Dinakaran.