அரசு மருத்துவமனை வாயிலில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்: நோயாளிகள் கடும் அவதி

3 hours ago 2

திருப்போரூர்: திருப்போரூர் அரசு மருத்துவமனை வாயிலில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால், அதனை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் பேரூராட்சியில் ஓ.எம்.ஆர். சாலையில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு திருப்போரூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு, செங்காடு, இள்ளலூர், தண்டலம், ஆலத்தூர், காட்டூர், வெங்களேரி, மடையத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வருகின்றனர்.

நாள் ஒன்றுக்கு 300க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த, மருத்துவமனையின் வெளிப்பக்கம் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும், சுகாதாரத்தை பேணும் வகையிலும் திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குப்பை கொட்டுதல், மலம், சிறுநீர் கழித்தல் போன்றவற்றை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட பூங்காவுக்கு வெளியே பொதுமக்கள் தற்போது குப்பை கொட்டும் இடமாக மாற்றி விட்டனர்.

பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் இங்கு குப்பை கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்தும் தொடர்ச்சியாக குப்பை கழிவுகளை கொட்டி வந்ததால் வேறு வழியின்றி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒரு குப்பைத்தொட்டி வைக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் அந்த குப்பை தொட்டியில் குப்பையை போடாமல் குப்பைத்தொட்டிக்கு வெளியே குப்பையை வீசிச் செல்கின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியே துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் தொற்று நோயை ஏற்படுத்துகிறது.

பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தினந்ேதாறும் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக குப்பை அள்ளும் பணி முக்கிய சாலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி பேட்டரி வாகனங்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பையையும், கழிவுப் பொருட்களையும் வாங்கிச் செல்கின்றனர்.

ஆனால், பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்காமல் மருத்துவமனை நுழைவாயில் அருகிலேயே இதுபோன்ற குப்பை கொட்டும் செயலில் ஈடுபடுவதும் வேதனை அளிப்பதாக தூய்மைப்பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகவே, பேரூராட்சி நிர்வாகம் இதுபோன்று சாலையோரங்களிலும், மருத்துவமனைக்கு வெளியிலும் குப்பை கழிவுகளை கொட்டும் நபர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரசு மருத்துவமனை வாயிலில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்: நோயாளிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article