அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 1,614 பேருந்துகள் கொள்முதல்: டெண்டர் கோரியது தமிழக அரசு

1 month ago 5

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,614 புதிய டீசல் பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழக போக்குவரத்துக் கழகங்களில் பழைய பேருந்துகளைக் கழித்து, புதிய பேருந்துகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களுக்கும் தரமான போக்குவரத்து சேவைகளைத் தொடர்ந்து வழங்கிட புதிய பேருந்துகளை வாங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்த நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, 2024-25ம் நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.1,535.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், பிஎஸ் 6 வகை கொண்ட 1,614 புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. இதன்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 245, விழுப்புரம் கோட்டத்திற்கு 347, சேலம் கோட்டத்திற்கு 303, கோவை கோட்டத்திற்கு 105, கும்பகோணம் கோட்டத்திற்கு 305, மதுரை கோட்டத்திற்கு 251, நெல்லை கோட்டத்திற்கு 50 என்று மொத்தம் 1,614 பேருந்துகள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில், 950 பேருந்துகள் 11 மீட்டர் நீளமும், 1,150 மி.மீ உயரமும், 484 செ.மீ டீலக்ஸ் பேருந்துகள் 11 மீட்டர் நீளமும், 1,150 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும்.

180 டீலக்ஸ் பேருந்துகள் 12 மீட்டர் நீளமும், 1150 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும். ஜெர்மன் வங்கி நிதி உதவியில் இந்த பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 300 பேருந்துகள் வரை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர் குறித்த சந்தேகங்களை அக்.29ம் தேதிக்குள் கேட்க வேண்டும் என்றும் அக்.28ம் தேதி டெண்டர் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தரமணியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனத்தில் நடைபெறும். இந்த டென்டரில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நிறுவனங்கள் டிசம்பர் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். டிசம்பர் 4ம் தேதி மாலை 3.30 மணிக்கு டெண்டர் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

The post அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 1,614 பேருந்துகள் கொள்முதல்: டெண்டர் கோரியது தமிழக அரசு appeared first on Dinakaran.

Read Entire Article