
தேனி,
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த சுருளிச்சாமி, நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு டி.கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையைக் கடந்து சென்றது.
அப்போது சாலையில் வேகமாக வந்த அரசுப் பேருந்து மாடுகள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 20-க்கும் மேற்பட்ட மாடுகள் காயம் அடைந்தன. மாடுகள் மீது மோதியதால் அரசு பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்பட்டதாக என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் சாலையில் இருந்து மாடுகளை அப்புறப்படுத்தினர். இதனால் பைபாஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அரசுப் பேருந்து ஓட்டுநரான அழகர்சாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.