சென்னை: பட்டுக்கோட்டை பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவி கவிபாலா உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவியின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சொக்கநாதபுரம் கிராமம், கொம்புக்காரன் குட்டை பகுதியைச் சேர்ந்த கண்ணன் - பரிமளா தம்பதியரின் மகள் கவிபாலா (12) என்பவர் பட்டுக்கோட்டை வட்டம், ஆண்டிக்காடு சரகம், பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் பயின்றுவந்த நிலையில் நேற்று (பிப்.10) பள்ளியில் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.