அரசு நிலத்தை தனியார் நிலம் என சொல்லி அதிகாரிகள் மாட்டிக்கொண்ட கதையை கூறுகிறார்: wiki யானந்தா

2 hours ago 1

‘‘வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏ சீட் வாங்குவதற்காக இப்போதே காய்நகர்த்தி வருகிறாராமே இலைக்கட்சி மாஜி அமைச்சர் தெரியுமா..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.‘‘கடலோர மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி மாஜி அமைச்சர் 2026 சட்டமன்ற தேர்தலில் கடலோர சட்டமன்ற தொகுதியில் போட்டியிட எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்து வருகிறாராம்.. இதற்காக அவரது ஆதரவாளர்களும் இப்போது இருந்தே களத்தில் நின்று படுவேகமாக வேலை பார்த்து வர்றாங்களாம்..

மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை சந்திப்பது, கூட்டம் நடத்துவது உள்ளிட்ட வேலைகளில் மாஜியானவரும் அதீத தீவிரம் காட்டி வருகிறாராம்.. இதன் மூலம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இப்போது இருந்தே ஆக்டிவாக இருப்பதை தலைமையிடத்தில் காட்டிக்கொள்வதற்காக தான் இந்த மாதிரி வேலையில் மாஜியானவர் களத்தில் குதித்து இருக்கிறார் என கட்சிக்குள்ளே பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சீட்டு பேரம் தொடங்குதற்கு முன்பே தொகுதிக்கு நிர்வாகிகள் சண்டை தொடங்கி இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘புரம் மாவட்டத்தில் கோயம்பேடு கட்சியின் மாஜி எம்எல்ஏ, மாவட்ட தலைநகர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேலைபாடுகளை துவக்கியிருக்கிறாராம்.. இலை கட்சி கூட்டணியில் கோயம்பேடு கட்சிக்கு ஒதுக்கும் தொகுதியில் இந்த மாவட்ட தலைநகர் தொகுதியை கேட்டு பெறுவதில் விடாப்பிடியாக இருக்கிறாராம்.. ஏற்கனவே இலை கட்சியில் இங்கு போட்டியிட்டு தோல்வியடைந்த மாஜி அமைச்சர், சொந்த ஊர் தொகுதிக்கு செல்வதால் இந்த தொகுதியில் கோயம்பேடு கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென்றும், தற்போதே தொகுதியில் களமிறங்குவதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டதாக மாஜி எம்எல்ஏ தரப்பு வெளிப்படையாக பேசி வருகிறார்களாம்..

கோயம்பேடு கட்சி மாஜி எம்எல்ஏ ஏற்கனவே இந்த தொகுதியில் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்கு வங்கியை பெற்றதால் இலைகட்சி கூட்டணியில் போட்டியிட்டால் எப்படியாவது வெற்றி பெறலாம் என்ற முனைப்பில் இருக்கிறாராம்.. ஆனால் இலை கட்சியிலேயே உள்ள சீனியர்கள் தங்களுக்கு ஒதுக்க கோரியும், பெண் கோட்டாவில் இந்த தொகுதியை தனக்கு ஒதுக்கக் கோரி உள்ளாட்சி தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க செய்த சீனியர் வழக்கறிஞரும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்களாம்.. சீட்டுபேரம் தொடங்குவதற்கு முன்பே தொகுதிக்கு நிர்வாகிகள் சண்டை துவங்கியிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சீனியர் மாஜிக்கு மாநில அளவில் போஸ்டிங் கொடுத்தது மான்செஸ்டர் இலைக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கொங்கு மண்டலத்தில் இலைக்கட்சியில் சீனியர் மாஜிக்கு மாநில அளவில் பதவி கொடுத்து கட்சி தலைமை திடீர் முக்கியத்துவம் கொடுத்திருப்பது கட்சியில் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறதாம்.. குறிப்பா கொங்கு மண்டல மாஜி பெல் கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.. மான்செஸ்டர் மேயராக இருந்தப்ப சீனியர் மாஜிக்கும், பெல் மாஜிக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டதாம்.. அதற்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதை கூட தவிர்த்து வந்தார்களாம்..

சீனியர் மாஜிக்கு கட்சியில இனிமே எந்த பதவியும் கிடைக்காது என்று பெல் மாஜி தனது ஆதரவாளர்கிட்ட கூறிவந்த நிலையில் திடீர்ன்னு மாநில அமைப்பு செயலாளர் பதவி கொடுத்ததை கேள்விப்பட்டதுமே மாஜி பெல் அலற ஆரம்பிச்சுட்டாராம்.. மான்செஸ்டர் மாவட்டத்துல உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் தோல்வி என தொடர் தோல்விய கட்சி சந்தித்துக்கொண்டு வருகின்ற நிலையில பெல் மாஜிக்கு செக் வைக்கிற விதமாக சீனியர் மாஜிக்கு கட்சியில முக்கியத்துவம் கொடுத்திருக்கிறதா அவரோட ஆதரவாளர்கள் நினைக்கிறாங்க..

இனி மான்செஸ்டர் இலைக்கட்சி அரசியல் களம் சூடுபிடிக்கும்னு எதிர்பார்க்கலாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மின் கம்பம் விவகாரத்துல சிஎம் செல்லுக்கே தவறான தகவல் கொடுத்து புகார்தாரரை அதிர்ச்சி அடைய வைச்சிட்டாங்களாமே அதிகாரிங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்டத்தில் சி.எம். செல்லுக்கே, தவறான தகவலை கொடுத்துட்டாங்க என்று மின் வாரியத்தின் மீது புகார் எழுந்து இருக்காம்.. அந்த மாவட்ட தலைநகரில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ள சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ரேஷன் கடையும், அங்கன்வாடி மையமும் இருக்குது..

இதன் அருகில் உயரழுத்த மின் கம்பிகள் செல்லும் மின் கம்பம் உள்ளது. இதற்கான ஸ்டே கம்பியும், அங்கன்வாடி மையம் அருகில் இழுத்து பதித்துள்ளனர். இந்த ஸ்டே கம்பியால் குழந்தைகளுக்கும், ரேஷன் கடைக்கு வருபவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது. எனவே ஸ்டே கம்பியை மாற்றுங்க என்று, மின் வாரியத்துக்கு கோரிக்கை வைச்சு இருக்காங்க.. ஆனால் நடவடிக்கை இல்லாததால், சி.எம். செல்லுக்கு புகார் அனுப்பி இருக்காங்க.. இந்த நிலையில் புகார் அனுப்பியவருக்கு, உங்கள் கோரிக்கை நிராகரிப்பு என்று பதில் வந்திருக்கு..

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவரு, சி.எம். செல்லுக்கு போன் போட்டு விவரத்ைத கேட்க, ஸ்டே கம்பியை அகற்ற நீங்கள் பணம் கட்ட வேண்டும் என கூறினாங்களாம்.. அரசு நிலத்தில் உள்ள ஸ்டே கம்பியை அகற்ற நான் ஏன் பணம் கட்ட வேண்டும் என கேட்டவரு, இத யாரு அனுப்பி இருக்கா என கேட்டிருக்கிறார். அப்போது தான் உங்கள் ஊர், இ.பி. ஆபீஸ்ல இருந்துதான் இந்த பதிலை தந்து இருக்காங்க என கூறினாங்களாம்.. இதை கேட்டு புகார்தாரர் அதிர்ச்சி அடைஞ்சாராம்..

அரசு நிலத்தை தனியார் நிலம் என்று காட்டி, சி.எம். செல்லுக்கே பொய்யான தகவலை கொடுத்து இருக்காங்க இந்த இ.பி. அதிகாரிங்க.. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுங்க என்று, இப்போது மீண்டும் சி.எம். செல்லுக்கு புகார் கொடுத்து இருக்காராம். இதனால் அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர். ஆனாலும் இன்னும் ஸ்டே கம்பியை எடுக்க யாரும் வராதது கவலையாக இருக்கிறதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post அரசு நிலத்தை தனியார் நிலம் என சொல்லி அதிகாரிகள் மாட்டிக்கொண்ட கதையை கூறுகிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article