அரசு கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி இன்டர்வியூ நடத்தி பேராசிரியை ரூ.28 லட்சம் மோசடி: கொலை மிரட்டல் விடுத்ததால் போலீசில் ஒப்படைப்பு

3 days ago 3

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி செய்த பேராசிரியையை, பாதிக்கப்பட்டவர்களே பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டை சேர்ந்தவர் செல்வராஜ். அரசு பஸ் கண்டக்டர். இவர் அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பவரிடம், அவரது மனைவி ராஜேஸ்வரிக்கு திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய தனபால், அவருடன் சென்று அக்கல்லூரி பேராசிரியை சியாமளா தேவியை அணுகியுள்ளார். அப்போது அவர் லேப் டெக்னீசியன் பணிக்கு ரூ.5 லட்சம், கிளார்க் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பி தனபாலும் பணத்தை கொடுத்துள்ளார். இதுபோல் செல்வராஜ் கடந்த 2023ல் மட்டும் ராஜேஸ்வரி மற்றும் காயத்ரி, நந்தினி, மாலினி, ரேவதி, செல்வராணி, லிங்கேஸ்வரன் ஆகிய 7 பேரிடம், அரசு கல்லூரி பணிக்காக ரூ.28 லட்சம் முன்பணமாக வாங்கி, சியாமளாதேவியிடம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே ராஜேஸ்வரி, நந்தினி காயத்ரி ஆகியோரை கடந்த 2023 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை தனித்தனியாக கல்லூரிக்கு அழைத்து போலி நேர்காணலை சியாமளாதேவியே நடத்தி நாடகமாடியுள்ளார். மேலும் லிங்கேஸ்வரனுக்கு சென்னையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் நேர்காணல் நடக்க உள்ளதாக கூறி அரசு முத்திரையுடன் கூடிய கடிதத்தை தயாரித்து, அதில் போலியாக ஆணையர் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளார்.

பணம் வாங்கி 2 ஆண்டுகளாகியும் இதுவரை யாருக்கும் அரசு கல்லூரியில் சியாமளாதேவி பணி வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து, பணத்தை திரும்ப கேட்டபோது சரியான பதில் அளிக்காமல் வெளிநபர்கள் மூலம் செல்போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் இடைத்தரகர் செல்வராஜ் ஆகியோர் கடந்த 19.11.24ல் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப்பிடம் புகார் மனு அளித்தனர். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சியாமளாதேவியை விசாரணைக்கு வருமாறு 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை.

இந்நிலையில் ராஜேஸ்வரி அவரது கணவர் தனபால், இடைத்தரகர் செல்வராஜ், காயத்ரி ஆகியோர் நேற்று முன்தினம் சீலப்பாடியில் உள்ள சியாமளாதேவியின் வீட்டிற்கு நேரில் சென்றனர். அங்கு இருதரப்புக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சியாமளாதேவி, ராஜேஸ்வரியை அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் வலுக்கட்டாயமாக சியாமளாதேவியை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் அழைத்து சென்றனர். போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி இன்டர்வியூ நடத்தி பேராசிரியை ரூ.28 லட்சம் மோசடி: கொலை மிரட்டல் விடுத்ததால் போலீசில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article