ஏப் 1-ம் தேதிக்கு பதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஏப்.2-ம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கருவூலம் மற்றும் கணக்குத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் கீழ் பணிபுரியும் 9.30 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், 7.05 லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் , குடும்ப ஓய்வூதியம் வழக்கமாக வரும் ஏப்.1ம் தேதி வங்கிக்கணக்கில் விடுவிக்கப்படும். ஆனால், இவ்வாண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் ஏப்.2ம் தேதி சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.